புதிய அமெரிக்க அதிபரால் அமெரிக்க உதவிகள் நிறுத்தி வைப்பு: ரகசிய தகவல் கசிவு
அமெரிக்கா தற்பொழுது நடப்பிலிருக்கும் வெளிநாட்டு உதவித் திட்டங்கள், புதிய உதவித் திட்டங்கள் ஆகியவற்றை நிறுத்திவைத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சு அந்நாட்டின் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியோருக்கு அனுப்பிய ரகசிய குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் கூறுகிறது.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை, புதிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது புதிய வெளிநாட்டுக் கொள்கைக்கு ஏற்ப, அடுத்த 90 நாள்களுக்கு அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களையும், அவை தொடர்பான ஆய்வு முடிவுறும்வரை, நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளுக்கு அமெரிக்கா மிக அதிக அளவில் உதவி செய்து வருகிறது. இதன் தொடர்பில் கடந்த 2023ஆம் ஆண்டு அது 68 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சின் குறிப்பின்படி, அனைத்து விதமான உதவியும், வளர்ச்சி நிதி, ராணுவ உதவி போன்ற அனைத்தும் நிறுத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கு விதிவிலக்காக அவசர உணவு உதவி, இஸ்ரேல், எகிப்து ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் ராணுவ உதவி ஆகியவை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரகசியக் குறிப்பில் கூறப்பிடப்பட்டுள்ளதை பிபிசி செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
“புதிய நிதி உதவி அல்லது ஏற்கெனவே இருக்கும் உதவித் திட்டத்தை நீடிப்பது போன்ற எதுவும் மறுஆய்வுக்கு உட்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே வழங்கப்படும்,” என்று அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த ரகசியக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி விளக்கியது.
அத்துடன், உதவித் திட்டங்களின்கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் மறுஆய்வு வரை அல்லது வெளியுறவு அமைச்சரின் முடிவை ஒட்டி மேற்கொள்ளப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், நடப்பிலிருக்கும் அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களின் மறுஆய்வு 85 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், அமெரிக்காவை வலிமையாக்குவது, அதிக பாதுகாப்பாக்குவது, அல்லது வளப்படுத்துவதாக இருந்தால் மட்டுமே அது வெளிநாடுகளுக்கு உதவி வழங்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது