மலேசியாவில் பிடிபட்ட போதைப்பொருள் கும்பலிடமிருந்த போலி ஆவணங்களும் கள்ளநோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி சாதாரண வெள்ளை நிற அட்டையை அடையாள அட்டையாக அந்தக் கும்பல் மாற்றி இருப்பதாகவும் சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமத்தையும்கூட அவர்கள் போலியாகத் தயாரித்து உள்ளதாகவும் ஜோகூர் காவல்துறை கூறி உள்ளது. ஜனவரி 13ஆம் தேதி ஜோகூர் பாருவில் குறைந்தபட்சம் நான்கு இடங்களில் போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டை நடைபெற்றது.
அப்போது இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் கும்பலின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் கூறினார்.
ஜோகூர் பாருவில் வியாழக்கிழமை (ஜனவரி 23) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைது செய்யப்பட்ட ஆடவர்களில் ஒருவரின் வயது 30 என்றும் மற்றவருக்கு 33 வயது என்றும் கூறினார்.
“பிடிபட்டவர்களிடம் இருந்து 21.8 கிலோ எக்ஸ்டசி போதைப்பொருள் தூளும் போதைப்பொருள் என்று நம்பப்படும் 40 லிட்டர் திரவமும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 3.68 மில்லியன் ரிங்கிட் (S$1.13 மில்லியன்),” என்று திரு குமார் தெரிவித்தார்.
மேலும், காஜாங்கில் திருடப்பட்ட கார் ஒன்றிலும் மற்றொரு வாகனத்திலும் போதைப்பொருள்களை அவர்கள் மறைத்து வைத்து இருந்ததாகக் கூறிய திரு குமார், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் உள்ள மற்றவர்களும் தேடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
போதைப்பொருள்களுடன் போலியாகத் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் 13, 20 ரிங்கிட், 50 ரிங்கிட், 100 ரிங்கிட் கள்ளநோட்டுகள் 18, போலி வங்கி அட்டைகள் 10, கார் மானியம் தொடர்பான போலி ஆவணம் ஒன்று ஆகியனவும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
யாருக்காக அந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக திரு குமார் கூறினார்..