ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு இரண்டு வாரம் கழித்து பணம் கட்டலாம்
இந்திய ரயில்வே பொதுமக்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு எளிமையான வழி கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொதுப் போக்குவரத்துத் துறையில் மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது ரயில்கள். பெரும்பாலான பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ரயில் போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர். பயண நேரம், செலவு இரண்டும் குறைவாக இருப்பதால் ரயில் பயணம் பெரும்பாலான மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.
சுலபமாக ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலமாக சௌகரியமாகப் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இணையம் மூலம் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது ‘புக் நவ் பே லேட்டர்’ என்ற தெரிவை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்த பின், பணத்தைச் செலுத்தலாம். இந்த அம்சம் ரயிலில் பயணம் செய்யும் பலருக்கும் உதவியாக இருக்கும்.
‘புக் நவ் பே லேட்டர்’ ஆப்ஷனில் டிக்கெட் முன்பதிவு செய்து 14 நாள்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் கட்டணம் செலுத்தி விட்டால், கூடுதலாகப் பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. 14 நாள்களுக்குள் செலுத்த தவறினால் சேவைக் கட்டணமாக 3.5% பணம் வசூலிக்கப்படும் என்பதை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.