புதிய தலைமையில் பொருண்மிய மீட்சி பெறுமா கானா? : சுவிசிலிருந்து சண் தவராஜா (ஒரு பார்வை)
வட ஆபிரிக்க நாடான கானாவில் மேனாள் ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவருமான ஜோன் மஹாமா புதிய ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுள்ளார். டிசம்பர் 7ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 56.6 விழுக்காடு வாக்குகளை அவர் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேனாள் துணை ஜனாதிபதி மஹமூது வவுமியா 41.6 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். மேனாள் ஜனாதிபதி நானா அகுபோ-அட்டோ இரண்டு தடவைகள் ஜனாதிபதிப் பதவியை வகித்திருந்த நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அவரால் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட முடியாத சூழலில் அவரின் துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த மஹமூது வவுமியா இந்தத் தேர்தலில் புதிய தேசபக்திக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தார்.
கானாவின் 11ஆவது ஜனாதிபதியான யோன் அற்ரா மில்ஸ் அவர்களின் பதவிக் காலத்தில் துணை ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த மஹாமா, மில்ஸின் மரணத்தைத் தொடர்ந்து 24 யூலை 2012இல் பதில் ஜனாதிபதியாகப் பெறுப்பேற்றிருந்தார். தொடர்ந்து 2012 டிசம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். எனினும் 2016 மற்றும் 2020 ஜனாதிபதித் தேர்தல்களில் நானா அகுபோ-அட்டோவுடன் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியிருந்தார்.
கானாவின் 14ஆவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள 66 வயது நிரம்பிய மஹாமா கானா சுதந்திரம் பெற்றதன் பின்னர் பிறந்து ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளும் முதலாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் உத்தியோக பதவியேற்பு வைபவம் யனவரி 7ஆம் திகதி தலைநகர் அக்ராவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பதவியேற்பு நிகழ்வில் நைஜீரியா, செனகல், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, புர்க்கினா பாசோ, கபுன் உள்ளிட்ட 20 நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்கு கொண்டிருந்தனர். இதில் புர்க்கினோ பாசோவை ஆளும் இராணுவத் தளபதி இப்ராஹிம் ராறே கலந்து கொண்டமை சிறப்புக் கவனத்துக்கு உரியது. மேனாள் ஜனாதிபதி நானா அகுபோ-அட்டோ ஆட்சியில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் மற்றொரு விசேட அம்சமாக துணை ஜனாதிபதியின் பதவியேற்பு அமைந்தது. கானா வாரலாற்றில் முதல் தடவையாக பெண் ஒருவர் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றுச் சாதனை படைத்துள்ளார். பேராசிரியை ஜேன் நானா ஒபோக்கு-அகிமங் 2013 முதல் 2017 வரையான காலப்பகுதியில் கல்வி அமைச்சராகச் செயற்பட்ட வேளை கல்வித் துறைக்கு ஆற்றிய பணியை கானா மக்கள் இப்போதும் நினைவு கூருவது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பரப்புரைக் காலத்தில் ஜேன் நானா துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட வேளை அவருக்கு எதிரான பலமான தாக்குதல்களை அப்போதைய ஆளுங்கட்சி தொடுத்திருந்தது. ‘அடுப்பூதும் பெண்களுக்கு அரசியல் எதற்கு?’ என்ற பாணியிலான கேலிப் பேச்சுக்களையும் அவர் கேட்க வேண்டியிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலோடு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும் மஹாமா தலைமையிலான தேசிய ஜனநாயகக் காங்கிரஸ் பெரு வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது. மொத்தமுள்ள 276 ஆசனங்களில் 183 ஆசனங்களை இந்தக் கட்சி பெற்றுக் கொண்டுள்ளது.
பதவியேற்பு வைபவத்தில் உரையாற்றிய மஹாமா, ‘எமது நாட்டை மீட்டெடுப்பதற்கான சரியான சந்தர்ப்பமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்ற அசைக்க முடியாத விருப்பத்துடன் கூடிய தலைமை ஒன்று சில காலமாக எமது நாட்டுக்கு அவசரமாகத் தேவைப்பட்டது. அத்தகைய ஒரு தலைவராக நான் விளங்குவேன் என முழு மனதுடன் நான் உறுதியளிக்கிறேன்’ என்றார்.
அது மாத்திரமன்றி, பொருண்மிய மீட்சி, கானாவின் வணிக மற்றும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துதல், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், ஊழலை இல்லாதொழித்தல் உள்ளிட்ட விடயங்களுக்குத் தனது ஆட்சியில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதிமொழி வழங்கினார். அத்தோடு ஆபிரிக்க நாடுகள் ஒன்றிணைந்து தமது பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
2016 முதல் 2024 வரையான நானா அகுபோ-அட்டோவின் ஆட்சிக் காலத்தில் கானாவின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன் அயல் நாடுகளுடனான உறவுகளும் மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
35 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாடான கானா மேற்கு ஆபிரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள உப சஹாராப் பிராந்தியத்தின் முதலாவது சுதந்திர நாடாக 1957 மார்ச் 6இல் உருவான கானா கொக்கோ ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது நாடாகவும் தங்கம் ஏற்றுமதியில் ஆபிரிக்கக் கண்டத்தின் முதல் நாடாகவும் உள்ளது.
என்ன வளம் இருந்து என்ன லாபம்? பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளைப் போலவே கானாவின் பொருளாதாரமும் தற்போது மிக மோசமான நிலையிலேயே உள்ளது. காலனித்துவவாதிகளின் சுரண்டல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்து, நாடு சுதந்திரம் அடைந்துவிட்ட பின்னரும் கூட நவீன வடிவில் முன்னாள் காலனித்துவ நாடுகளின் சுரண்டல்கள் ஏதோ ஒரு விதத்தில் தொடரவே செய்கின்றன.
இவ்விடத்தில் அண்மையில் பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்த கருத்து ஒன்று நினைவில் கொள்ளத்தக்கது. அண்மைக் காலத்தில் புர்க்கினோ பாசோ, மாலி, சாட், நைஜர் ஆகிய மேனாள் பிரெஞ்ச் காலனித்துவ நாடுகள் பிரான்ஸ் நாட்டுடனான இராணுவத் தொடர்புகளைத் துண்டித்ததுடன், பிரான்ஸ் நாட்டுப் படைகளையும் தமது மண்ணில் இருந்து வெளியேற்றி இருந்தன. தமது நாடுகளில் செயல்பட்டுவரும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவென நிலை கொண்டிருந்த பிரெஞ்சுப் படைகள் உரிய முறையில் செயற்படவில்லை எனக் குற்றஞ் சாட்டியே இந்த நாடுகள் அவற்றை வெளியேற்றின. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மக்ரோன் தமது உதவி தொடர்பில் குறித்த நாடுகள் நன்றி மறந்துவிட்டன என்றார். எனினும் அவரது படைகள் குறித்த நாடுகளில் செயல்பட்டமை பற்றிய விமர்சனங்கள் தொடர்பில் அவர் பதிலேதும் உரைக்கவில்லை.
கானாவைப் பொறுத்தவரை புதிய ஆட்சியாளர் நம்பிக்கையளிப்பவராகக் காணப்படுகின்றார். ‘கானா விஷன் 2020’ என்ற பொருண்மிய முன்னேற்றத் திட்டத்தின் கீழ் ஆபிரிக்கக் கண்டத்தின் பொருளாதார வளர்ச்சி பெற்ற முதலாவது நாடு என்ற இலக்கை 2029இல் எட்டுவதை நோக்கிச் செயற்பட்டு வருகின்றது. அதேபோன்று, 2030க்கும் 2039க்கும் இடையில் புதிய கைத்தொழில்மய நாடு என்ற இலக்கை அடைவதற்கும் உத்தேசித்துள்ளது. இந்த இலக்குகளை அடைவதற்கான இயற்கை வளம் கானாவில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஊழலற்ற ஆட்சி நீடிக்குமாக இருந்தால் இந்த இலக்குகளை அடைவது ஒன்றும் சாத்தியமற்ற ஒன்று அல்ல. நாட்டின் தேசிய சொத்துக்களை அரசுடைமையாக்குவதன் ஊடாக இந்த இலக்குகளை எட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நவீன வடிவங்கள் ஊடாக சுரண்டலை மேற்கொண்டுவரும் மேனாள் காலனித்துவ நாடுகளும், அவர்களின் முகவர்களான பெரு வணிக நிறுவனங்களும் கானாவின் இலக்குகள் எட்டப்படுவதை அனுமதிப்பார்களா என்பது மிகப் பெறுமதியான கேள்வி. அத்தகைய தடைகளைச் சமாளித்து முன்னேறும் வல்லமை மஹாமா போன்ற தலைவர்களுக்கு இருக்குமாயின் கானாவுக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சந்தேகம் இல்லை.
– சுவிசிலிருந்து சண் தவராஜா