புகை பழக்கத்தில் இருந்து விடுபட ஹெல்மட் பூட்டு; மனைவி கையில் சாவி

துருக்கியில் உள்ள குடாஹ்யா நகரைச் சேர்ந்த இப்ராஹிம் யூசெல் என்பவர், தனது புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக தனது தலையில் ஒரு கூண்டைப் பொருத்திக் கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தைப் போன்று தனது வீட்டில் தயாரிக்கப்பட்ட செப்புக் கூண்டுக்குள் கணவரின் தலையை வைத்து பூட்டி, அதன் சாவியை அவரது மனைவி வைத்துக்கொள்கிறார்.

உணவு நேரத்தில் மட்டுமே அவரது மனைவி கூண்டைத் திறந்துவிடுகிறார்.

அந்தக் கூண்டுடனே யூசெல் எங்கும் போகிறார், வருகிறார்.

யூசெல் தனது 16 வயதிலிருந்தே நாள் ஒன்றுக்கு இரண்டு பெட்டி சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலைப்பட்டதால், அந்த கெட்ட பழக்கத்தைக் கைவிட பல ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளார்.

தனது மூன்று பிள்ளைகளின் பிறந்தநாள், ஆண்டுவிழா போன்ற பல சந்தர்ப்பங்களில் அவர் புகைபிடிப்பதை நிறுத்துவதாக உறுதியளித்தார். எனினும், அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போனது.

அத்துடன், யூசெலின் தந்தையும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகமான அளவில் புகைபிடித்து வந்ததால் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.

தனது தந்தை போல் தனக்கும் ஆகிவிடக் கூடாது என்று நினைத்த யூசெல், 2013ஆம் ஆண்டு முதல் தனது தலையை செப்புக் கூண்டுக்குள் வைத்து அடைத்து வருகிறார்.

கம்பிகளுக்கு இடையே உள்ள சிறிய இடைவெளிகள் மூலம் ஒரு ஸ்டராவை பயன்படுத்தி தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அதே நேரத்தில் புகைபிடிப்பதைத் தடுக்க தலைக்கவசம் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்கள், ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிகரெட் புகைப்பதால் தங்கள் உயிரை இழப்பதாகத் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.