17. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்
பகுதி 17
இந்திய ஆயுத பயிற்சியும் : கொமன்வெல்த் மாநாடும்
உமா மகேஸ்வரனும், இயக்கத் தோழர்களும் டெல்லி வரும் முன்பு, எழுத மறந்த ஒரு சம்பவம் முதல் பிரிவு இந்திய பயிற்சி எடுப்பவர்கள் ரயிலில் டெல்லி ஊடாக போகும் போது டில்லியில் ரயில் நிலையத்தில் அவர்களை வசதி பட்டால் சந்தித்து சில செய்திகளை கூறச் சொன்னார்கள்.
இவர்கள் பயிற்சி எடுக்கும் இடத்தில் வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பயிற்சி எடுத்தால் அவர்கள் எவ்வளவு பேர், ? எல்லோருக்கும் ஒரே விதமான பயிற்சியா? பயிற்சி அளிக்கும்இடம் ,போன்ற விபரங்களை கவனமாக பார்க்கும்படி தோழர்களிடம் ரகசியமாக கூறச் சொல்லி சென்னையில் இருந்து தகவல் வந்தது.
நான் நினைக்கிறேன் என்னைப் பார்த்த விஜயபாலன் என்கிற சின்ன மென்டிஸ் (அவர்தான்எமது தோழர்களுக்கு தலைமை தாங்கியவர் என நினைக்கிறேன்) என்னைப் பார்த்து விட்டு , ரயிலிலிருந்து இறங்கி வர நான் முழு விபரங்களையும் கூறி பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களோடு வந்த இந்திய ராணுவ அதிகாரிகள் என்னை உடனடியாக திருப்பி அனுப்பிவிட்டு, அதைப்பற்றி மேலிடத்துக்கு தகவல் அனுப்பி உள்ளார்கள்.
உமா , சந்தித்தவர் எமது இயக்கத் தோழர் வெற்றிச்செல்வன்தான் என கூற , இனிவரும் காலங்களில் யாரையும் இப்படி சந்திக்க அனுப்ப வேண்டாம் என கூறிவிட்டார்கள்.
டெல்லியில் கொமன்வெல்த் நாடுகளின் சர்வதேச மாநாடு நவம்பர் 23ஆம் தேதி ஆரம்பமாக இருப்பதால், அங்கு வரும் உலக நாட்டுத் தலைவர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையிலிருந்து இலங்கை அரசின் தமிழின விரோதப் போக்கு பற்றிய ஆங்கிலத்தில் உள்ள துண்டுப்பிரசுரங்கள், இலங்கையில் இனபிரச்சினை பற்றிய சிறு ஆங்கில கையேடு, இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் என பெரும் தொகையாக எனக்கு வந்தன.
அந்த நேரத்தில் அல்லது அதற்குப் பின்போ லண்டனிலிருந்து முதன்முறையாக சக்திதாசன் என்பவர் வந்தார். அப்போது அங்கிருந்த எல் கணேசன் எம்பி அவருடன் பேசிவிட்டு பல் விளக்கி குளிக்க சொன்னார்.
கணேசன் எம் பி என்னிடம் சக்தி தாசனுக்கு பிரஷ் பேஸ்ட் கொடுக்கும்படி கூறினார் . சக்திதாசன் வேண்டாம் என்று கூறிவிட்டு அவரது பேண்ட் இல் இருந்த பெரிய பெரிய பைகளில் இருந்து சோப், பிரஸ், சின்ன ஷாம்பு, பவுடர், சென்ட், எல்லாவற்றையும் எடுத்துக்காட்டினார். அப்படியே போய் குளித்து விட்டு வந்தார்.
அவரையே அன்று எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தோம். சக்திதாசன் லண்டனில் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் கொண்டு வந்து கொடுத்ததாக நினைவில் இருக்கிறது.
புது டில்லியில் இருக்கும் அனைத்து எம்பஸ்ஸி களுக்கும், ஹைகமிஷன்களுக்கும் கொடுப்பதற்காக புத்தகங்களை கவர்களில் போட்டு தயார் செய்தோம். அதேநேரம் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு கொடுப்பதற்காகவும் அந்தந்த நாடுகளின் ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரி பெயர் போட்டு கவர்கள் செய்தோம்.
எனக்கு இதற்காக உதவி செய்த டெல்லி நண்பர்கள் சித்தார்த்தன், சம்பத், மற்றும் ஒரு இந்தியன் வங்கியில் வேலை செய்த நண்பர் அவரின் பெயர் வெற்றிச்செல்வன் மிகவும் உயரமானவர்.
கொமன்வெல்த் மாநாடு நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. புதுடில்லி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களோடு காசி ஆனந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா டெல்லி வரவழைக்கப்பட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
கொமன்வெல்த் மாநாட்டு செயல்பாடுகள் தொடர்பாக இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கு எல்லா விதத்திலும் ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தவர் திரு. ஜி பார்த்தசாரதிஅவர்கள்.
ஜி.பார்த்தசாரதி அவர்கள் , அமிர்தலிங்கம் அவர்களுடனும் ரகசியமாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருந்ததாக அறிந்தேன். அமிர்தலிங்கம், இந்திய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைக்கு போகும்போது M. சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தனை மட்டுமே கூட்டிக்கொண்டு போவார். நான் மரியாதை நிமித்தம் அமிர்தலிங்கத்தை சந்திக்க போயிருந்தேன்.
அவர்தான் ரொம்ப பிஸியான போதும் என்னை சந்தித்து பேசினார். பின்பு நான் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரிரு வார்த்தை பேசிவிட்டு காசி ஆனந்தன் இருந்த ரூமில் போய் இருந்து விட்டேன். அங்கு மாவை சேனாதிராஜாவும் தங்கியிருந்தார். காசி ஆனந்தன் கொழும்பில் வேலை செய்த காலத்தில் 1976ம் ஆண்டிலிருந்து எனக்கு அவரை நன்றாகத் தெரியும்.
எனது அண்ணாவும் அவரும் கொழும்பில் ஒரே ரூம் மேட்ஸ். அவருக்கு என்னை எனது 10வயசிலிருந்து தெரியும். 1976,1977 ஆண்டுகளில் என நினைக்கிறேன் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த போது, யாழ் வண்ணார்பண்ணையில் நடந்த கூட்டத்தில் இவர்களுக்கு ரத்த பொட்டுவைத்து கொண்டாடினோம்.
அப்படிக் கொண்டாடிய இவர்கள் அன்று பார்க்கும்போது மாவை சேனாதிராஜாவும், காசி ஆனந்தனும் பார்க்க பாவமாக இருந்தது. அவர்கள் என்னை அன்று ஒரு பெரிய போராளியாக பார்த்தார்கள். திரும்பி வரும்போது வாசலில் என்னை பார்த்த யோகேஸ்வரன் எம் பி , சாவகச்சேரி எம்பி நவரத்தினம் ஆகிய இருவரும் என்னை கூட்டிக்கொண்டு போய் என்னைப் பற்றியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றியும் , டெல்லியில் எனது வேலையைப் பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டார்கள்.
23ஆம் தேதி நான் எல்லா தூதுவர் அலுவலகங்களுக்கும் புத்தகம் கொடுக்க போவதாக கூறினேன். அவர்களுடன் தாங்களும் , இன்னொரும் வருவதாகவும் தங்களுக்கு இந்திய அரசு , எல்லா இடமும் போய்வர ஒரு கார் கொடுத்துள்ளதாகவும் கூறினார்கள் . தாங்களும் புதுடில்லி சுத்தி பார்ப்பதாகவும் கூறினார்கள். எனக்கும் செலவில்லாமல் காரில் போவது வசதியாக போய் விட்டது.
முதன் முதலில் இந்திய அரசின் சார்பாக சிறையில் உமா மகேஸ்வரனையும் , பிரபாகரனையும் முதன் முதலில் சந்தித்த இந்திய அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்த IB அதிகாரிகள் இருவரும் இலங்கைப் பிரச்சினை டெல்லியில் தொடங்கி விட்டதால் டெல்லிக்கு மாற்றப்பட்டு, அவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் அமிர்தலிங்கம் அவர்களினதும் , மற்றவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொண்டு இருப்பதை பார்த்தேன். அவர்களை சென்னையில் நான் ஏற்கனவே சந்தித்து இருப்பதால் அவர்களை தெரியும். ஆனால் அவர்கள் அங்கு என்னை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
தொடரும்…..