யாழ்ப்பாணத்தில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த கனடிய விவசாய நிபுணர் திடீர் மரணம்!
யாழ்ப்பாணத்தில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோது கனடாவைச் சேர்ந்த இலங்கைப் பிறப்பிடமாகக் கொண்ட விவசாய நிபுணர் ரவிச்சந்திரநேசன் (58), தவறி விழுந்து மரணமடைந்தார்.
கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக பணிபுரியும் புகழ்பெற்ற அறிஞர், டாக்டர் பொன்னத்துரை ரவிச்சந்திரநேசன் (58), யாழ்ப்பாணத்தில் விவசாயிகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மரணமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நேற்று (25) யாழ்ப்பாண வேளாண் மையத்தில் நடந்தது. ஜூம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை இணைத்தபோது, விவசாயிகளுக்கான இந்த சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவ்வேளை, திடீரென மயங்கி விழுந்த அவர் உடனடியாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே மரணமடைந்திருந்ததாக உறுதிப்படுத்தினர்.
டாக்டர் ரவிச்சந்திரநேசனின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பொன்னத்துரை ரவிச்சந்திரநேசன் யாழ்ப்பாணம் கோப்பாய்-கட்டைப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர்,கனடா சென்று , டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில், வடக்கு மாகாணத்தின் புவியியல் மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்த, 13 நாட்களுக்கு முன்பு அவர் யாழ்ப்பாணம் வந்தார்.
அவரின் திடீர் மரணம் கல்வியியல் மற்றும் விவசாய ஆராய்ச்சித்துறைக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.