கூகல் ஊழியரணிக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி

செயற்கை நுண்ணறிவு தொடர்பான கொள்கைகளுக்கும் பொதுமக்களின் கருத்துகளுக்கும் வடிவம் கொடுக்க கூகல் நிறுவனம் முயன்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக, தனது ஊழியரணிக்குச் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்வித் திட்டங்களை வகுப்பதில் ஆல்ஃபபெட் குழுமத்துக்குச் சொந்தமான அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. ஆல்ஃபபெட்டின் நிர்வாகி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

“அதிகமான மக்களும் அரசாங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளும் செயற்கை நுண்ணறிவையும் அதன் கூறுகளையும் அதிகமாகப் பயன்படுத்துவது, சிறந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளுக்கான அவசியத்தை உணர்த்துகிறது.

“அந்தப் பரவலான பயன்பாட்டின் மூலம் புதிய வாய்ப்புகளும் உருவாகின்றன,” என்று ஆல்ஃபபெட்டின் உலக விவகாரப் பிரிவின் தலைவர் கென்ட் வாக்கர் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்துவதில் மைக்ரோசாஃப்ட், மெட்டா போன்ற தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் கூகலுக்குப் போட்டியாக விளங்குகின்றன.

கூகலின் நடப்பு வர்த்தகங்களான விளம்பரம் மற்றும் தேடல் பிரிவுகளுக்குக் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட இருப்பதை அது கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே, ஒழுங்குமுறை விதி கட்டுப்பாட்டு அமைப்பைச் சரிக்கட்டும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தனது விளம்பரத் தொழில்நுட்ப வர்த்தகத்தின் ஒரு பகுதியை விற்க கூகல் முன்வந்து உள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் நீதித் துறை தனது பணிகளில் குரோம் இணைய உலாவி பயன்படுத்துவதை வலுக்கட்டாயமாக நிறுத்த முயன்று வருகிறது. அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நீதித்துறையின் போக்கு மாறக்கூடும் என்பதால் அந்த முயற்சி அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் எழுந்திருக்கும் பதிப்புரிமை மற்றும் ரகசியக் காப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உலக நாடுகள் புதிய விதிமுறைகளை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

கூகல் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு கல்வித் திட்டங்களை வகுக்க US$120 மில்லியன் (S$161 மில்லியன்) முதலீட்டு நிதியை ஒதுக்க இருப்பதாக அதன் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை 2024 செப்டம்பரில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் துணைத் தலைமைப் பொறுப்புகளில் உள்ள வாக்கரும் ரூத் போர்ட்டும் உலக நாடுகளுக்குப் பயணம் செய்து கொள்கை பரிந்துரைப்புகள் தொடர்பாக அரசாங்கங்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.