இன்ஸ்டகிராம் மூலம் நட்பை வளர்க்க விரும்பும் தென்கொரிய இள வயதினர்

தென்கொரியப் பதின்ம வயதினர் புதிய நட்பு வட்டத்தை உருவாக்கும்போது தொலைபேசி எண்களைவிட சமூக ஊடக கணக்குகளையே பரிமாறிக்கொள்கின்றனர்.

அதிலும், ‘இன்ஸ்டகிராம்’ சமூக ஊடகத்தையே அவர்கள் பெரிதும் விரும்புவதாக அண்மையில் வெளியான புதிய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

‘ஊரி பேங்க்’ எனும் தென்கொரிய அனைத்துலக வங்கி நடத்திய ஆய்வில், 14 முதல் 18 வயதுடைய 3,729 தென்கொரிய பதின்ம வயதினர் பங்கேற்றனர். அவர்களில் 70.3 விழுக்காட்டினர் சமூக ஊடக கணக்குகளின் மூலமே மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். ஆய்வில் கலந்துகொண்ட 57.5 விழுக்காட்டினர் புதியவர்களுடன் தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொள்ளவதாகக் கூறினர்.

15.8 விழுக்காட்டினர் மட்டும் ‘காகோ டாக்’ எனும் குறுஞ்செய்தி செயலியின் கணக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.

சமூக ஊடக கணக்கை நட்புடன் பகிர விரும்பும் பதின்ம வயதினரில் 97.5 விழுக்காட்டினர் ‘இன்ஸ்டகிராம்’ சமூக ஊடகத்தையே பயன்படுத்த அதிகம் விரும்புகின்றனர்.

தொலைபேசி அழைப்புகளின் மூலம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதையும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதையும் இக்காலப் பதின்ம வயதினர் மன அழுத்தமாகப் பார்ப்பதாக அந்த ஆய்வு விவரித்தது.

சமூக ஊடகத் தளமான ‘இன்ஸ்டகிராம்’ மில் இருக்கும் குறுஞ்செய்திகளைச் சீரிய முறையில் அனுப்பும் அமைப்பு, காட்சி அம்சங்களுடன் வாழ்க்கையில் நடந்த தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் அமைப்பு ஆகியவை எந்தவொரு அழுத்தமுமின்றி மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க உதவுவதாகத் தென்கொரிய பதின்ம வயதினர் கூறியதாக அது சொன்னது.

அத்துடன், தொலைபேசி எண்களைத் தனிப்பட்ட ஒன்றாக அவர்கள் எண்ணுகின்றனர் என அந்த ஆய்வு தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.