இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தில் ராணுவ அணிவகுப்பு (Video)
இந்தியாவின் 76வது குடியரசு தினம் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மதச்சார்பற்ற நிரந்தர இந்தியக் குடியரசு அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது. அதனை மக்களாட்சி மலர்ந்த தினமாக, குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை அறிவித்து, செயல்படுத்தியது
அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
குடியரசு தின சம்பிரதாயப்படி, தலைநகர் டெல்லி ராஜ்பாத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) அதிபர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
அவர் கொடியேற்றியதும் வானில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. தொடர்ந்து, 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படை வீரா்கள் பங்கேற்ற அந்த அணிவகுப்பு நாட்டின் ராணுவ பலத்தை உலகுக்குப் பறைசாற்றும் விதத்தில் அமைந்தது.
இவ்வாண்டின் குடியரசு தினம், அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் (பவள விழா) நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையிலும் இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்தது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊா்திகள் அணிவகுத்துச் சென்றது கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.
‘ஸ்வா்ணிம் பாரத்: விராசத் ஒவுர் விகாஸ்’ அதாவது ‘தங்க இந்தியா: பாரம்பரியமும் மேம்பாடும்’ என்ற கருப்பொருளில் அந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
முப்படைகளின் அலங்கார ஊர்திகள் ‘பலம்வாய்ந்த, பாதுகாப்பான பாரதம்’ என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. நடனமணிகள் பங்கேற்ற அலங்கார ஊர்திகளும் அணிவகுத்துச் சென்றன.
குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கலந்துகொண்டார்.
அதனையொட்டி, இந்தோனீசிய ராணுவ வீரா்கள் மற்றும் இசைக் குழுவினர் பங்கேற்ற அணிவகுப்பும் இடம்பெற்றது.
திரு பிரபோவோவை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி, முப்படைத் தளபதிகளை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
விழாக் கொண்டாட்டங்களைக் காண டெல்லியில் உள்ள ‘கர்தவ்யா பாத்’ (கடமைப் பாதை) பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சிகளை அலங்கரிக்க 45க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் உட்பட 5,000 கலைஞர்கள் பங்கேற்றதாக இந்திய அரசாங்கம் கூறியது.
நாற்பது விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்தின. அவற்றில் இந்திய ஆகாயப் படையின் 22 போர் விமானங்களும் இடம்பெற்று இருந்தன.
கிராமப் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், பேரிடர் மீட்புப் பணியாளர்கள், ‘ஆஷா’ சமூக சுகாதாரப் பணியாளர்கள், பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் உட்பட 10,000 சிறப்பு அழைப்பாளர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
மோடியின் சிறப்பு உடை
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது பிரதமர் மோடி பலவண்ண தலைப்பாகை அணிவது வழக்கம். இவ்வாண்டு, சிவப்பும் மஞ்சளும் கலந்த தலைப்பாகையுடன் வெண்ணிற குர்தா-பைஜாமாவும் பழுப்பு நிறச் சட்டையும் மோடி அணிந்திருந்தார்.