கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்.
குடும்பச் சண்டையின்போது கணவன் கடித்துக் குதறவே, மனைவியின் உதட்டிலிருந்து நிற்காமல் ரத்தம் கொட்டியதால் மருத்துவர்கள் 16 தையல்கள் போட்டு உதட்டை ஒட்டவைக்க வேண்டியதாயிற்று.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா அருகிலுள்ள நக்லா புச்சான் எனும் சிற்றூரில் நிகழ்ந்தது.
நடந்தது என்ன என்பதை அப்பெண்ணால் வாயைத் திறந்து சொல்ல முடியவில்லை என்றும் அதனால் அப்பெண் ஒரு தாளில் எழுதிக் காட்டினார் என்றும் கூறப்பட்டது.
தன் கணவர், மாமனார், மைத்துனர்மீது அப்பெண் புகார் அளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) அப்பெண் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது, வீட்டிற்கு வந்த அவருடைய கணவர் விஷ்ணு காரணமின்றி அவருடன் சண்டையிட்டதாகவும் அமைதியாக இருக்கும்படி கூறிய அப்பெண்ணை அவர் அடிக்கத் தொடங்கியதாகவும் காவல்துறை உயரதிகாரி மோகித் தோமர் விவரித்தார்.
அப்போது, திடீரென தன் கணவர் தன் உதட்டைக் கடித்ததால் ரத்தம் கொட்டியதாகவும் தடுக்க முயன்ற தன் தங்கையையும் அவர் அடித்ததாகவும் அப்பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தன் கணவரின் செயல் குறித்து தன் மாமியாரிடமும் மைத்துனரிடமும் தான் சொல்லியதாகவும் ஆயினும் அவர்கள் தன்னைத் திட்டியதோடு அடித்து உதைத்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
தகவலறிந்த அப்பெண்ணின் தந்தை, அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகாரளித்தார்.
இதனையடுத்து, அப்பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனர் ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், காவல்துறை அவர்களைத் தேடி வருகிறது.