மகாரா‌ஷ்டிராவில் ரூ.12,000 கோடியில் ஒளியியல் தொழில்நுட்பப் பூங்கா.

மகாரா‌ஷ்டிரா மாநிலத்தில் பராஸ் பாதுகாப்பு நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்து மாபெரும் ஒளியியல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கவுள்ளது.

“பராஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்’ இந்தியாவின் மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் இணைந்து மகாராஷ்டிராவின் நவி மும்பையில் முன்மொழியப்பட்ட ஒளியியல் தொழில்நுட்பப் பூங்கா திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒளியியல் தொழில்நுட்பப் பூங்கா திட்டம் 2028 ஆம் ஆண்டில் தொடங்க உள்ளது,” என்று பராஸ் பாதுகாப்பு நிறுவனம் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் 2,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களுக்கான இந்தியாவின் முதல் முக்கிய தொழில்நுட்ப நிலையத்தை நிறுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒளியியல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான நில ஒதுக்கீடு குறித்து மாநில அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிகிறது.

இந்தத் திட்டத்தை எவ்விதத் தடையுமின்றி தொடங்குவதற்கான வழிவகைகளை செய்து தருவதற்கு மாநில அரசு, அந்த நிறுவனத்திற்கு உறுதியளித்துள்ளதாக பராஸ் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மாநில அரசின் கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி மாநிலத்தின் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து அனுமதி, நிதி போன்றவற்றை எளிதில் பெற்று திட்டத்தை எவ்விதச் சிக்கலுமின்றி தொடங்க மகாரா‌ஷ்டிரா அரசு உதவுவதாக உறுதியளித்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.