திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிப்பது தற்கொலைக்குத் தூண்டுவதாக ஆகாது – உச்சநீதிமன்றம்

திருமணத்திற்கு மறுப்புத் தெரிவிப்பது தற்கொலைக்குத் தூண்டுவதாக ஆகாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனது மகனை காதலித்த பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஒரு தாயின் மீது வழக்குப் பதியப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி வி நாகரத்னம், சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு, மேல்முறையீடு செய்த பெண்ணின் மகனுக்கும், உயிரிழந்த அவரது காதலிக்கும் இடையேயான தகராறு காரணமாக அவர் உயிரிழந்ததால் பதியப்பட்டது. அதில், உயிரிழந்த பெண்ணை தவறாகப் பேசி, திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக மேல்முறையீடு செய்த பெண்ணின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை, சாட்சிகளின் வாக்குமூலங்கள் உட்பட பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களும் சரியானவை என்று எடுத்துக் கொண்டாலும், மேல்முறையீடு செய்தவருக்கு எதிராக ஒரு சிறிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

”ஐபிசி பிரிவு 306ன் கீழ் அந்தப் பெண்ணின் மீதான குற்றச்சாட்டுகள் மறைமுகமாக இருக்கின்றன. மேல்முறையீடு செய்தவர் மீது இயற்கையாக எந்தக் குற்றமும் இல்லை. தற்கொலை செய்துகொண்ட பெண் அவருக்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்று துரதிஷ்ர்டவசமாக முடிவெடுத்துள்ளார்.

மேல்முறையீடு செய்தவர் இறந்த பெண்ணிற்கும் அவரது மகனுக்குமான உறவை முறித்துக் கொள்ள எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று விசாரணை பதிவுகள் மூலம் தெரிய வருகின்றது.

இறந்த பெண்ணின் குடும்பத்தினரே இந்த உறவு குறித்து மகிழிச்சியின்றி இருந்துள்ளனர். இறந்த பெண்ணிற்கும் தனது மகனுக்குமான திருமணத்திற்கு ஒப்புதல் வழங்காதது தற்கொலைக்குத் தூண்டுவதாக ஆகாது.

மேலும், அந்தப் பெண் இறந்தாலும் காதலனை அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறுவதும் த்ற்கொலைக்குத் தூண்டுவதாகாது. ஐபிசி 306 பிரிவின் படி, இறந்த நபரை நேரடியாக தற்கொலைக்குத் தூண்டும் சூழலை உருவாக்குவதே தண்டனைக்குரியதாகக் கருதப்படும்” என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.