“ஸ்ரீ வித்யா என் காதலிதான்.” : ஜோன் துரை செல்லையா
அது என்ன காரணமோ தெரியவில்லை; எல்லோருக்குமே இவரை பிடிக்கும்.
அப்படித்தான் கமலுக்கும் கூட பிடித்துப் போனது ; அதுதான் காதல் ஆனது. கல்யாணம் வரைக்கும் போனது. அதனால்தான் பிரச்சினையும் ஆனது.
ஆனால் அந்த ஸ்ரீவித்யா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் !
“எதற்காக ஜான் ?”
எப்போதோ அவர் எதிர்பார்த்திருந்து ஏங்கியிருந்த வார்த்தைகளை,
பல காலத்துக்குப் பின்னர் சொல்லி இருக்கிறார் கமல்.
“ஸ்ரீ வித்யா என் காதலிதான்.”
-முதல்முறையாக வெளிப்படையாக இதை வெளி உலகத்துக்குச் சொன்னார் கமல், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு !
2015 தீபாவளி தினத்தன்று விஜய் டிவியில் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி;
கமலுடன் டி.டி.
நிகழ்ச்சியின் இடையே ஒரு சில புகைப்படங்களைக் கமலிடம் காட்டிய டி.டி., அந்தப் படத்தில் உள்ளவர்கள் பற்றி கமலுக்கு தோன்றும் நினைவுகளை சொல்லச் சொன்னார்.
முதல் படம் ஸ்ரீவித்யா கமலுடன் சேர்ந்து இருக்கும் இதோ, இந்த ‘அபூர்வ ராகங்கள்’ போட்டோ.
ஸ்ரீவித்யாவின் படத்தைக் கண்டவுடன் கமல் முகத்தில் சந்தோஷமும் சோகமும் மாறி மாறி வந்தன. அதை மறைக்க அவர் முயற்சிக்கவில்லை.
ஸ்ரீவித்யா படத்தைப் பார்த்தபடியே தழுதழுத்த குரலில் கமல் சொன்னார் :
“அபூர்வ ராகங்கள்.
இந்தப் படம் எடுக்கும்போது எனக்கு 19 வயசு. என் கூட அவங்க நடிச்சுக்கிட்டு இருக்கும்போது, நான் ஒரு திறமையாளன் என்பதை நன்கு உணர்ந்து அதை எனக்கு உணர்த்திய ஸ்ரீவித்யா… ஒரு …”
சரளமாக பேசிக் கொண்டே வந்த கமல் சற்றே தடுமாற, எடுத்துக் கொடுக்கிறார் டி டி.
டி டி : (சந்தேகக் குரலில்) “அன்புத் தோழி ?”
கமல் : (அழுத்தமாக)
“ தோழி… காதலி..!
ஆம். அதில ஒண்ணும் சந்தேகமே இல்ல. எங்கள் இருவருக்கும் இடையில் அந்தக் காதல் இறுதிவரை இருந்தது.”
தீர்க்கமாக இதைச் சொன்னார் கமல்.
ஆம். ‘அபூர்வ ராகங்கள்’ காலத்திலேயே ஆரம்பித்து விட்டது அந்தக் காதல் ராகங்கள் .
அதைத் தொடர்ந்து நாள்தோறும் புதுப் புது கிசுகிசுக்கள் பிறந்தன.
ஆனால் கமல் ஸ்ரீவித்யா – இருவருமே அதை ஒருபோதும் ஒத்துக் கொண்டதும் இல்லை. மறுத்ததும் இல்லை.
திடீர் என்று எழுந்த திருமணப் பேச்சும் திடீர் என்று அப்படியே நின்று போனது.
அவ்வளவுதான்.
அதன் பின் 2006 இல் ஸ்ரீவித்யா இறந்து விட, பல வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு,
2015 தீபாவளி தினத்தன்றுதான் முதல் முறையாக,
‘ஸ்ரீவித்யா தன் காதலிதான்’ என்பதை வாய் திறந்து பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் கமல்.
நம் எல்லோர் வாழ்க்கையிலுமே
எத்தனையோ “ஏன்”கள்,
இறுதிவரை விடை காண இயலாத கேள்விகளாகவே, வெளி உலகத்திற்குத் தெரியாமலேயே மறைந்து போய் விடுகின்றன.
கமல், ஸ்ரீவித்யா காதலும் கூட இப்படித்தான்.
இருவருமே இதயபூர்வமாக காதலித்தும், இறுதிவரை அதை வெளியில் சொல்லாதது ஏன் ?
தன் இறுதிக் காலத்தில் ஸ்ரீவித்யா தமிழ்நாட்டை விட்டு சிகிச்சைக்காக கேரளா சென்று விட்டது ஏன் ?
அவரது அந்த அஸ்தமன காலத்தில் எவரையும் பார்க்க விரும்பாத ஸ்ரீவித்யா, கமலை மட்டும் கடைசியாகப் பார்த்து கண்ணீர் வடித்தது ஏன் ?
கமலைப் பார்த்த அடுத்த சில நாட்களிலேயே, ஸ்ரீவித்யாவின் உயிர் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்தது ஏன் ?
“ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் – மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.”
கமல் , ஸ்ரீவித்யா – இருவரும் தங்கள் காதலை வெளியில் சொல்ல முடியாததற்கான அந்தக் காரணம்
அது அந்த இருவருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியும்.
ஆம்.
எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதமான “சொல்லத்தான் நினைக்கிறேன்” இருக்கத்தான் செய்கிறது.
அக்டோபர் 19 – இன்று ஸ்ரீவித்யா நினைவு தினம்.
ஆக்கம் : John Durai Asir Chelliah