சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஷ்டிப்போம் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/01/IMG-20250128-WA0024.jpg)
இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துக்கொள்ளாது, இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை காணப்படுவதால் இம்முறை இலங்கையின் சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஷ்டித்து வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவிகள் பங்குகொள்ளும் ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி, கிளிநொச்சி மாவட்ட தலைவி க.கோகிலவாணி, வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெனிதா ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கருத்துகளை தெரிவித்தனர்.
எதிர்வரும் 4ஆம் திகதியை இலங்கை பூராகவும் சுதந்திர தினமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் இதனை கறுப்பு நாளாக அனுஷ்டித்து வருகின்றோம்.
வெள்ளை வேனில் கொண்டுசெல்லப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று 15 வருடமாக எந்த நீதியும் வழங்காமல் இருப்பது மிகவும் மனவேதனை அளிப்பதோடு, அந்த உறவுகளையும் தேடி வருகின்றோம்.
புதிய அரசாங்கம் அமைந்த பின்னரும் எங்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லாத நிலையில், எங்களது உறவுகளை தேடிவரும் நிலையில் எதிர்வரும் 4ஆம் திகதியை கரிநாளாக அனுஷ்டித்து கிழக்கு மாகாணம் சார்பாக மூன்று மாவட்டங்களும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கவன ஈர்ப்பு பேரணியை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம்.