இந்தோனீசியாவிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்ய இலங்கை திட்டம்
தேங்காய்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தோனீசியாவில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்ய உள்ளது இலங்கை.
கைத்தொழில், தொழில்முனைப்பு மேம்பாடு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தோட்டம், சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன ஆகியோர் இவ்வாரம் கூட்டு அமைச்சரவை அறிக்கையைச் சமர்ப்பிக்கவிருந்தனர். தேங்காய்ப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான தற்போதைய வழிமுறைகள் குறித்து மீள் மதிப்பீடு செய்யப்பட்டதால் இது தாமதமானது.
இந்தோனீசியாவில் இருந்து முக்கியமாக இறக்குமதி செய்யப்படும் தேங்காய், மாவாக்கப்பட்ட தேங்காய்ப் பூ, தேங்காய் பால் உள்ளிட்ட தேங்காய்பொருள்களின் இறக்குமதியை அமைச்சரவை அறிக்கை கொண்டிருக்கும் என்று தென்னை மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணதுங்க கூறினார்.
“ஆய்வுகளின் படி, இந்தோனீசியா தேங்காய் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு மிகவும் பொருத்தமான நாடாக உள்ளது,” என்று திரு. ரணதுங்க கூறினார்.
தேவைக்கு ஏற்ப தேங்காய் தொடர்பான பொருள்களை இறக்குமதி செய்ய தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மொத்தமாக 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. உடையாமல் தேங்காயை இறக்குமதி செய்வது குறித்தும் ஆராயப்படுகிறது.
புதிய அமைச்சரவை அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தேங்காய் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், வேளாண் தரவு அறிக்கையின்படி அக்டோபரில் உற்பத்தியில் 24% வீழ்ச்சி கண்டது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2,452 மில்லியன் காய்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டன. 2023ன் மொத்த அறுவடை 2,950 மில்லியன் காய்களாக குறைந்தது. இது முந்தைய ஆண்டுகளில் 3,350 மில்லியனைவிட மிகக்குறைவு.
உற்பத்தி மேலும் சரியும் என்று தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. 300 மில்லியன் காய்களின் பற்றாக்குறை எதிர்பார்க்கப்படுகிறது. 2025ன் முதலரைப்பகுதியில் 1,407 மில்லியன் காய்களே அறுவடையாகும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.
தேங்காய்க்கும் தேங்காய்ப் பொருள்களுக்கும் பெயர் பெற்ற இலங்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் போதுமான உரம் கிடைக்காததால் தேங்காய் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. உர இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து உர விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
பற்றாக்குறை காரணமாக வெர்ஜின் தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வியட்னாம் போன்ற நாடுகள் தேங்காய் உற்பத்தியை அதிகரித்துள்ளதால் போட்டித்தன்மையும் கூடியுள்ளது.
இலங்கை 2024ல் யுஎஸ் 782 மில்லியன் டாலர் மதிப்புள்ள தென்னை நார், கார்பன், தேங்காய்ப் பூ உள்ளிட்ட தேங்காய் பொருள்களை ஏற்றுமதி செய்தது. 2023ன் யுஎஸ் 708 மில்லியன் டாலரை மதிப்பிலான ஏற்றுமதியைவிட இது அதிகம். எனினும், உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை இந்த வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.