வர்த்தகப் போர் வந்தால் அமெரிக்காவுக்கே அனைத்து இழப்பும்: பிரான்ஸ்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகப் போரில் இறங்கினால், அமெரிக்காவுக்கே அனைத்து இழப்புகளும் வந்துசேரும் என்று பிரான்ஸ் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜான் நோவல் பரோ கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28ஆம் தேதி) சக அமெரிக்க வெளியுறவு அமைச்சரான மார்கோ ருபியோவுடன் தொலைபேசியில் உரையாடினார். அதைத் தொடர்ந்து பேசிய பரோ, அதிபர் டிரம்ப் வரிவிதிப்பில் இறங்கினால் ஐரோப்பாவில் உள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்க நிறுவனங்களே முதலில் பாதிப்புக்கு உள்ளாகும் என்று எச்சரித்தார்.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றிய 2023ஆம் ஆண்டு வர்த்தகப் புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்காவுக்கு S$220.7 பில்லியன் அளவுக்கு துண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு முக்கியமான பிரச்சினையாக இருப்பதாக ஒப்புக்கொண்ட திரு பரோ, ஐரோப்பியர்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் பொருள்களைவிட அமெரிக்கர்களே ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகமாக வாங்குவதாகத் தெரிவித்தார்.
ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீட்டைவிட அமெரிக்கர்கள் ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்துள்ளதே அதிகம் என்பதை பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் சுட்டினார். ஆகையால், வர்த்தகப் போர் ஏற்பட்டால் அமெரிக்காவுக்கே அனைத்து இழப்பும் ஏற்படும் என்று கூறினார்.
தற்போதைய நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டுப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற தமது அச்சுறுத்தலை செயல்படுத்தாமல் இருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
ஆனால், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் ஏற்படலாம் என்ற அச்சம் வெகுவாகவே உள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
மேலும், அமெரிக்க உறவு குறித்த மற்றொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது டென்மார்க் நிர்வாகத்தின்கீழ் வரும் கிரீன்லேண்ட் நாட்டை அமெரிக்கா தன்வசமாக்கிக் கொள்ளப் போவதாக டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கை. இதில் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் டென்மார்க்கிற்கு தங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இப்போதைக்கு அதிபர் டிரம்ப் தான் முன்பு கூறியதுபோல் இதுவரை ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்காதது ஐராப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உக்ரேன் போர் தொடர்பில் பதவியேற்ற பின் அதிபர் டிரம்ப் போரை நிறுத்தாவிட்டால் ரஷ்யா அதிகத் தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒத்துப்போகும் நிலை என்பதால் ஐரோப்பிய நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவுடன் வெளிப்படையாக மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.