மலேசியர்களை மணந்த வெளிநாட்டவர்களுக்கான நிரந்தரவாச விண்ணப்ப காத்திருப்புக் காலம் குறைப்பு

மலேசியர்களை மணந்த வெளிநாட்டினர் இனி மூன்று ஆண்டுகளில் அந்நாட்டின் நிரந்தரவாசத் தகுதிக்கு (பிஆர்) விண்ணப்பிக்கலாம்.

முன்னர் இந்தக் காத்திருப்புக் காலம் ஐந்து ஆண்டுகளாக இருந்தது.

மேலும், நிரந்தரவாச விண்ணப்பங்களுக்கான புள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையும் கைவிடப்படுகிறது. அம்முறை குழப்புவதாகவும் கடினமானதாக உள்ளதாகவும் விண்ணப்பதாரர்கள் பலர் குறிப்பிட்டிருந்தனர்.

புதிய நிரந்தரவாச விண்ணப்பங்களை ஆராய்ந்து முடிவெடுக்க ஆறு மாதங்களாகும் என்று மலேசிய உள்துறை அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

மலேசியர்களை மணமுடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் கடந்தபோதும், நிரந்தரவாசத் தகுதி கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டுத் துணைவர்கள் குறைந்தது ஓராண்டுக்கேனும் நீண்டகால வருகை அனுமதி அட்டையில் (LTSVP) இருந்திருக்க வேண்டும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“இந்தப் புதிய விதிமுறைகள் 2025 செப்டம்பர் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்,” என்று அமைச்சு கூறியுள்ளது.

புள்ளி அடிப்படையிலான நிரந்தரவாச விண்ணப்ப முறை குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுத் துணைவர் ஆதரவுக் குழு அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.