வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகளது உண்ணாவிரத போராட்ட எதிர்ப்புக்கு மத்தியில் – யாழ் வரும் ஜனாதிபதி அநுர.
வடக்கு – கிழக்கு வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகள் சங்கம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக நேற்று முன்தினம் (29) தொடக்கம் தொடர்ச்சியான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளது.
இவர்கள் தெரிவித்திருப்பதாவது, தேர்தல் காலத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்னும் 21,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்.
அத்துடன், தேர்வுகள் அல்லது பொதுப் பரீட்சைகள் நடத்தாமல், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப உடனடியாக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
முதலில், யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், கோரிக்கைக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை மேற்கொண்டதால், அவர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தீர்மானித்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போது ஆரம்பமாகியுள்ளதுடன்,
மதியம் 1.30 மணிக்கு வல்வெட்டித்துறையில்,
அதனைத் தொடர்ந்து மணிக்குள் 3.30க்கு சாவகச்சேரியில் இரண்டாவது சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், இன்று (31) யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளார். அதன்பின்னர், வடக்கு – கிழக்கு வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகள் சங்கத்தினரின் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்தித்து இப்பிரச்சினை குறித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.