தலைசிறந்த விமான நிறுவனமாக ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) உலகின் ஆகச் சிறந்த விமான நிறுவனமானத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஃபார்ச்சூன் சஞ்சிகை வரைந்திருக்கும் ‘உலகளவில் பலரைக் கவரும் நிறுவனங்கள்’ பட்டியலில் எஸ்ஐஏ 28வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3,380 நிர்வாகிகள், நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு நடத்தப்பட்ட கருத்தாய்வை மையமாக வைத்து அந்தப் பட்டியல் 27வது முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. கருத்தாய்வில் பங்கேற்றோரிடம் அவர்களை ஆக அதிகம் கவர்ந்த 10 நிறுவனங்கள் யாவை என்று கேட்கப்பட்டது.

புத்தாக்கம், உலகளவில் போட்டித்தன்மையுடன் செயல்படும் விதம் உள்ளிட்ட ஒன்பது அம்சங்களைக் கொண்டு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டன.

சிங்கப்பூரின் தேசிய விமான நிறுவனமான எஸ்ஐஏ, சென்ற ஆண்டுக்கான பட்டியலில் 29வது இடத்தில் வந்தது. 2023ல் அந்நிறுவனம் 31வது இடத்தைப் பிடித்தது.

இவ்வாண்டு 28வது இடத்தைப் பிடித்துள்ள எஸ்ஐஏ, பட்டியலின் முதல் 50 இடங்களில் வந்துள்ள ஒரே சிங்கப்பூர் நிறுவனமாகும்.

ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் பட்டியலில் 25வது இடத்தில் வந்தது. பட்டியலில் அதற்கு அடுத்தபடியாக ஆக உயரிய நிலையில் வந்த ஆசிய நிறுவனம் என்ற பெருமையையும் எஸ்ஐஏ பெற்றுள்ளது.

மேலும், 23வது முறையாக எஸ்ஐஏ ஃபார்ச்சூன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள பல நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களாகும். ஸ்டார்பக்ஸ், அக்செஞ்சர் (Accenture), விசா, சாம்சுங் போன்ற நிறுவனங்களைப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியது எஸ்ஐஏ.

தொடர்ந்து 18வது ஆண்டாக ஆப்பிள் நிறுவனம் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அதற்கு அடுத்தபடியாக மைக்ரோசாஃப்ட், அமேசான் ஆகியவை வந்தன.

சென்ற ஆண்டு இரண்டாவது ஆகச் சிறந்த விமான நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்ஐஏ இவ்வாண்டு ஆகச் சிறந்ததாகத் தெரிவு செய்யப்பட்டது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் பிடித்தது.

Leave A Reply

Your email address will not be published.