‘டீப்சீக்’கிற்கு சிங்கப்பூர் வழியாக சில்லுகள் (chips) சென்றதன் சாத்தியம் குறித்து விசாரணை

சீனாவுக்கு அனுமதிக்கப்படாத கணினி சில்லுகளை (chip), புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான டீப்சீக் (DeepSeek) பயன்படுத்துவதன் சாத்தியம் குறித்து அமெரிக்காவின் வர்த்தகத் துறை விசாரித்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு உதவும் சில்லுகள் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்குத் தடை உள்ளது. குறிப்பாக, என்விடியா Nvidia நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சில்லுகளுக்கு அந்தத் தடை உள்ளது. அதிநவீன சில்லுகள் சீனாவுக்குச் சென்றுவிடாத வகையில் அந்தத் தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், டீப்சீக் நிறுவனத்திற்கு அந்தச் சில்லுகள் கிடைத்தது எப்படி என்பது குறித்த விசாரணை தொடங்கி உள்ளதாக அதுகுறித்து அறிந்த ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.

மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு சிற்றரசுகள் போன்ற நாடுகள் வழியாக அந்தச் சில்லுகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அதுகுறித்து அமெரிக்க வர்த்தகத் துறை உடனடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து தனக்குக் கிடைக்கும் வருவாயில் சீனாவுக்கான விற்பனை எதுவும் இடம்பெறவில்லை என்று என்விடியா பேச்சாளர் ஒருவர் கூறியதாக Investing.com இணையத்தளத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான அறிக்கை குறிப்பிட்டது.

என்விடியாவின் மொத்த விற்பனையில் சிங்கப்பூர் 20 விழுக்காட்டை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்படும் செயற்கை நுண்ணறிவுக் கருவியாக டீப் சீக் உருவெடுத்து உள்ளது. அது அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவசச் செயலியாகவும் டீப்சீக் மாறியுள்ளது.

அதன் விளைவாக, அமெரிக்கத் தொழில்நுட்பப் பங்குகளின் விற்பனையில் US$1 டிரில்லியன் (S$1.35 டிரில்லியன்) இழப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.