குழப்பம், நீண்ட இழுபறிக்குப் பின்னர் அடுத்தகட்ட இஸ்ரேல், பாலஸ்தீன பிணைக் கைதிகள் விடுவிப்பு (Video)

நீண்ட இழுபறிக்குப் பின்னர் அடுத்தகட்ட இஸ்ரேல், பாலஸ்தீன பிணைக் கைதிகள் விடுவிப்பு நிகழ்ந்து உள்ளது.

இஸ்ரேல் 110 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்ததும் ஹமாஸ் குழுவினர் மூன்று இஸ்ரேலியர்களையும் ஐந்து தாய்லாந்து நாட்டவரையும் விடுவித்தனர்.

முதற்கட்ட சண்டைநிறுத்த உடன்பாட்டின்கீழ் நிகழ்ந்துள்ள மூன்றாவது ஒப்படைப்புச் சம்பவம் இது.

ஒப்படைப்பு நிகழ்ந்த இடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்களில் பலர் ஆத்திரத்துடன் காணப்பட்டனர். அந்த நிலவரம் ஒப்படைப்பைத் தாமதம் ஆக்கியது.

காஸாவின் தெற்கு நகரான கான் யூனிஸில் வியாழக்கிழமை (ஜனவரி 30) செஞ்சிலுவைச் சங்கம் வாயிலாக விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்களில் ஆர்பெல் யெஹுட் என்னும் 29 வயதுப் பெண்ணும் ஒருவர்.

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்தப் பெண் சிறைபிடிக்கப்பட்டார்.

ராணுவ வீரர்கள் புடைசூழ விடுவிக்கப்பட்டபோது அவர் தளர்ந்த நிலையில் நடந்து சென்றார். அங்கு திரண்டிருந்த கூட்டத்தினரால் தாம் தாக்கப்படக்கூடும் என்ற அச்சம் அவரது கண்களில் தெரிந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

விடுவிக்கப்பட்ட மற்றோர் இஸ்ரேலியர் 80 வயது காடி மோசஸ். அமைதி விரும்பியும் வேளாண் விஞ்ஞானியுமான அவரும் அதே 2023 அக்டோபர் 7ஆம் தேதி பிணைக்கைதியாக சிறைபிடிக்கப்பட்டவர்.

மேலும், அன்றைய தினம், இஸ்ரேலின் வயல்வெளிகளில் வேலை செய்துகொண்டு இருந்தபோது ஹமாஸ் இயக்கத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட ஐந்து தாய்லாந்துவாசிகளும் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிணைக்கைதிகள் விடுவிப்பு தொடர்பாக எழுந்த குழப்பம் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

தமது நாட்டின் பிணைக்கைதி எவரையேனும் யாராவது காயப்படுத்தினால் அவர்களுக்கு மரணம் நிச்சய்ம் என்று அவர் மிரட்டல் விடுத்தார்.

ஒப்படைப்புப் பகுதியில் குழப்பம் நிலவியதால் பிணைக்கைதிகளின் பாதுகாப்புக் கருதி அவர்களைத் தாமதமாக விடுவிக்குமாறு திரு நெட்டன்யாகுவும் இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸுவும் உத்தரவிட்டு இருந்தனர்.

“எங்களது நாட்டினர் பத்திரமாக விடுவிக்கப்பட்டால்தான் அடுத்தகட்ட கைதி பரிமாற்றம் குறித்து உறுதிசொல்ல முடியும்,” என்றனர் அவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.