யாரை ஏமாத்துறீங்க? ராணா பேட்டிங் ஆடி துபே பவுலிங் போட்டா ஒத்துக்குவீங்களா?

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய அணியில் ஹர்ஷித் ராணா பாதி போட்டியில் மாற்று வீரராக களமிறக்கப்பட்டதை எதிர்த்து வருகின்றனர்.

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. சிவம் துபே அரை சதம் அடித்திருந்தார். அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தது. அப்போது சிவம் துபே பேட்டிங் செய்தபோது தலையில் பந்து தாக்கியதால் ஏற்பட்ட மூளை அதிர்ச்சியால் போட்டியில் இருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டார். விதிப்படி போட்டியில் இருந்து வெளியேறும் வீரருக்கு இணையான மாற்று வீரரை தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பேட்டிங்கில் அதிக திறனும், பவுலிங்கில் குறைந்த திறனும் உடைய சிவம் துபேவுக்கு மாற்றாக பவுலிங்கில் அதிக திறன் உடைய ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இது பற்றி அம்பயர்களிடம் விளக்கம் கேட்டு இருந்தார். போட்டிக்கு பின்னரும் அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் இதில் இந்திய அணி செய்தது நியாயமே இல்லை என்பதை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இது பற்றி ஒரு இங்கிலாந்து ரசிகர் சமூக வலைதளத்தில் முக்கிய விஷயம் ஒன்றை சுட்டிக் காட்டி இருக்கிறார். அதாவது, “சிவம் துபே பேட்டிங் செய்த பிறகு அவருக்கு இணையான மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்து இருக்கிறீர்கள்.

ஒருவேளை இந்திய அணி முதலில் பவுலிங் செய்து அப்போது சிவம் துபே அணியில் இடம் பெற்றுவிட்டு அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்யும் போது ஹர்ஷித் ராணாவை மாற்று வீரராக தேர்வு செய்வீர்களா?. அது முடியாது என்றால் சிவம் துபேவுக்கு, ஹர்ஷித் ராணா இணையான மாற்று வீரர் இல்லை” என கூறி இருக்கிறார்.

இதன் மூலம் சிவம் துபேவும், ஹர்ஷித் ராணாவும் இணையான மாற்று வீரர்கள் இல்லை என்பதை அவர் எளிமையான உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறார். அதே சமயம் இந்திய அணி மாற்று வீரர் தொடர்பான விதிகளில் இருந்த ஓட்டையை பயன்படுத்தி இதை அமல்படுத்தியதாக சிலர் விளக்கமும் அளித்து இருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.