இரு இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகள் விடுவிப்பு.

காஸாவில் இரு இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) விடுவித்தது. யார்டென் பிபாஸ், ஒஃபெர் கெல்டரோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்க இஸ்‌ரேலியரான கீத் சீகல் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட திரு கெல்டரோன் பிரான்ஸ் மற்றும் இஸ்‌ரேலியக் குடியுரிமை பெற்றவர். அவரையும் திரு பிபாசையும் காஸாவின் தென்பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் செஞ்சிலுவை அதிகாரியிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்ததாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

திரு சீகல் அதே நாளன்று காஸா நகர் துறைமுகத்தில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்தி பலரைப் பிடித்துச் சென்று பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர்.

பிணைக்கைதிகளில் ஆக இளையர்களான ஒன்பது மாத குழந்தை கிஃபிர், நான்கு வயது ஏரியல் ஆகியோரின் தந்தை, பிப்ரவரி 1ல் விடுவிக்கப்பட்ட பிபாஸ் ஆவார். பிபாசின் இரண்டு பிள்ளைகளும் அவரது மனைவியுமான ஷிரியும் இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹமாஸ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 182 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்‌ரேல் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹமாஸ் கூறியது. போர் நிறுத்த உடன்படிக்கையின் முதல் கட்டமாக 33 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 17 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.இதுவரை 400 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்‌ரேல் விடுவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.