“வளர்ப்பு முதலை தப்பினால் அவசர எண்ணுக்கு அழைக்காதீர்கள்” – பிரிட்டன் அவசர அழைப்புச் சேவை.
அவசரம் இல்லையென்றால் அழைக்க வேண்டாம் என்று பிரிட்டனிலுள்ள மருத்துவ உதவி வாகனச் சேவை அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரிட்டனில் பொதுச் சுகாதாரச் சேவைகள் அதிக நெருக்குதலுக்கு உட்பட்டுள்ள நிலையில் உண்மையாக உதவி தேவைப்படும் சிலர் மணிக்கணக்கில் அல்லது நாட்கணக்கில் அதற்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெறப்பட்ட 426,000 அழைப்புகளில் 15 விழுக்காடு அதாவது நாளொன்றுக்கு 175 அழைப்புகள் அவசரமற்றவை என்று அதிகாரிகள் கூறினர்.
அவற்றில் சில அழைப்புகள் சுகாதாரம் சாரந்தவை அல்ல என்றனர் அவர்கள்.
உதாரணத்துக்குத் தமது மகன் வளர்க்கும் முதலை தப்பிவிட்டதாகத் தந்தை ஒருவர் செய்த அவசர அழைப்பை இன்னும்கூட மறக்கமுடியவில்லை என்கிறார் அவசர அழைப்புச் சேவை மையத்தைச் சேர்ந்த எம்மா வொரல் (Emma Worrall).
ஆனால் அதற்கெல்லாம் மருத்துவ உதவி வாகனத்தை அனுப்ப முடியாது என்று எம்மா ஆடவரிடம் கூறினார். அதற்குப் பதில் தந்த ஆடவர் “அப்போது முதலையிடம் நான் கடிபடும் வரை நீங்கள் எந்த உதவியும் எனக்கு அனுப்பப்போவதில்லை?” என்று ஆத்திரப்பட்டதாகச் சொன்னார்.
இந்த மாதிரியான சூழ்நிலைகளை மிகவும் பொறுமையாகக் கையாள வேண்டியிருப்பதாக எம்மா கூறினார்.
சிலருக்கு ஆபத்து எது அவசரம் எது என்பதில்கூட இன்னும் குழப்பம் இருப்பதாக அவர் சொன்னார்.
காணாமல் போன கைத்தடியைத் தேடித் தரச் சொல்வது, மிக மோசமான கனவு கண்டு பயந்துபோனதற்காகக் கூட சிலர் அவசரமாக அழைப்பதுண்டு என்று எம்மா கூறினார்.
எனவே 999 என்ற எண்ணுக்கு அழைப்பதற்கு முன்பாக மாற்று வழிகளை யோசிப்பது நல்லது என்று அவர் அறிவுறுத்தினார்.