பிலடெல்பியாவில் விமான விபத்து – 7 பேர் மரணம் (Video)
அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் மருத்துவ உதவி விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் மாண்டனர். அவர்களில் 6 பேர் விமானத்தில் இருந்தவர்கள். ஒருவர் தரையில் இருந்தவர் என்று பிலடெல்பியா மேயர் கூறினார்.
ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக அந்த விமானம் மெக்சிகோவின் டிஜுவானா (Tijuana) நகருக்குச் சென்று கொண்டிருந்தது. குழந்தையின் தாயார், விமானிகள் இருவர், ஒரு மருத்துவர், ஓர் உதவியாளர் ஆகியோரும் அந்த விமானத்தில் இருந்தனர். அவர்கள் அனைவரும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள்.
புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விமானம் மாபெரும் நெருப்புக் கோளமாய்த் தரையில் விழுந்து நொறுங்கியது.
சம்பவத்தில் 19 பேர் காயமடைந்தனர். இன்னும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விமானம் விழுந்த இடத்தில் தரைவீடுகளும் கடைகளும் இருந்தன. விபத்துக்குப் பிறகு அங்கிருந்த பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைபட்டது. விமானச் சிதைவுகளைக் கண்டால் அவற்றைத் தொட வேண்டாம் என்று பிலடெல்பியா மேயர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.