இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்: விஜய் நம்பிக்கை
இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம் என்று தமிழக வெற்றிக் கழகக் கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
நின்று, நிதானித்து, நேர்மையோடு நடைபோட வேண்டும் என்றும் அவர் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனையூர் பகுதியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார் விஜய். பின்னர் அவர் தவெக கொள்கைத் தலைவர்களான காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார்.
முன்னதாக கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது என்றும் கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது.
“அதில்தான், கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம். எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று, நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்.
“குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை, மக்கள் பிரச்னைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம்,” என்று விஜய் கூறியுள்ளார்.
தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது, மக்களரசியல் மட்டுமே என்றும் கட்சியின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல் மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் படிதான் வரும் 2026ம் ஆண்டு தேர்தல்,” என்று விஜய் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தவெகவில் அண்மையில் இணைந்த விசிக முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு, தேர்தல் பிரசார பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.