பெலாரஸில் ஜனாதிபதி தேர்தல்: லுகஷெங்கோவின் அபார வெற்றி – மேற்குலகின் எதிர்ப்பு : சுவிசிலிருந்து சண் தவராஜா

மேனாள் சோவியத் ஒன்றிய நாடான பெலாரஸில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நடப்பு ஜனாதிபதி அலெக்சான்டர் லுகஷெங்கோ அபார வெற்றி பெற்றுள்ளார். 86.82 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதாகத் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1994ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி பதவியில் இருந்துவரும் லுகஷெங்கோ ஐரோப்பாவில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்துவரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். 30 ஆண்டுகளைக் கடந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் அவர் 7 தடவைகள் தேர்தலில் வெற்றி பெற்று மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பதவியில் நீடிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தேர்தலில் முதல் சுற்றிலேயே லுகஷெங்கோ வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 4 வேட்பாளர்களில் ஒருவர் கூட 5 விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 6.9 மில்லியன் வாக்காளர்களில் 85.7 விழுக்காடு வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருந்தனர்.

முறையான போட்டியாளர்கள் களத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில் அல்லது லுகஷெங்கோவை எதிர்க்கும் பலர் நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில் நடைபெற்றுள்ள தேர்தல் ஒரு ஏமாற்று வேலை எனக் கூறும் மேற்குலகம் இந்தத் தேர்தல் முடிவுகளைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. சுதந்திர ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தை எதிர்க்கும் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நடைபெற்றுள்ள இந்தத் தேர்தல் ஜனநாயக விரோதமானது என மேற்குலகம் கூறி வருகின்றது.

எடுத்துக்காட்டாக, தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பெயார்பொக், “பெலாரஸ் மக்களுக்கு வேறு தெரிவு இல்லை. சுதந்திரத்துக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் ஏங்கும் மக்களுக்கு இது ஓர் கசப்பான நாள். சுதந்திரமாக கருத்தைத் தெரிவிக்கும் தைரியம் பெற்ற 1,200க்கும் அதிகமான அப்பாவிகள் பெலாரஸ் சிறைகளில் வாடுகின்றனர்” எனத் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக கடந்த 2020இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் பெலாரஸில் நடைபெற்றன. மேற்குலக ஆதரவு பெற்ற சக்திகளால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களை லுகஷெங்கோ அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களுள் ஒருவரான ஸ்வியற்லானா சிக்கனவ்ஸ்கயா தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தார். நாட்டைவிட்டு வெளியேறி அஞ்ஞாதவாசம் செய்யும் அவரை பெலாரஸின் உத்தியோகபூர்வ தலைவராக மேற்குலகம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தற்போதைய தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் சர்வாதிகாரிகளின் வழக்கமான சம்பிரதாயத்தைப் போல தன்னை வெற்றிபெறச் செய்யும் தேர்தலை லுகஷெங்கோ நடத்தி முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஸ்யாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பெலாரஸ் ரஸ்யாவுடன் நெருங்கிய நல்லுறவைப் பேணி வருகின்றது. ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் லுகஷெங்கோவும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர். உக்ரைன் போரில் ரஸ்யாவைப் பகிரங்கமாக ஆதரிக்கும் நாடுகளுள் மிக முக்கிய நாடாக பெலாரஸ் உள்ளது. இந்நிலையில் லுகஷெங்கொவின் தேர்தல் வெற்றி ரஸ்யாவைப் பொறுத்தவரை மிகவும் பெறுமதியான ஒன்றாக உள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற லுகஷெங்கோவிற்கு ரஸ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிக் உள்ளிட்டோர் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

“தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றியானது உங்கள் அரசியல் அதிகாரத்தையும், உங்கள் கொள்கைகளுக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது. ரஸ்ய மண்ணின் அதிதியாக உங்களுக்கு என்றென்றும் வரவேற்பு உள்ளது. நாங்கள் ஏற்கனவே இணங்கியவாறு ரஸ்யாவுக்கான தங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என புட்டின் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனது தேர்தல் வெற்றி தொடர்பிலான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள லுகஷெங்கோ, “நான் உண்மையிலேயே சர்வாதிகாரிதான். எனது சர்வாதிகாரம் சட்டம், இரக்கம், மக்களின் மீதான மரியாதை குறிப்பாக கஸ்ரப்படும் மக்களின் மீதான மரியாதை என்பவற்றின் அடிப்படையிலானது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தேர்தலை அங்கீகரிக்கிறதா இல்லையா என்பது பிரச்சனையில்லை. பெலாரஸ் மக்கள் அதனை அங்கீகரிக்கிறார்கள் என்பதே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். அவரின் வெற்றியை நான் ஏற்றுக் கொள்ளவில்லை எனச் சொல்வதால் மாற்றம் ஏதாவது நிகழ்ந்து விடுமா?” எனக் கூறியுள்ளார்.

2020 தேர்தலை ஒட்டி நடைபெற்ற ஆர்;ப்பாட்டங்களும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையும் அமெரிக்காவினதும் அதன் ஐரோப்பிய அடிவருடிகளதும் உக்ரைன் நாட்டினதும் திட்டமிட்ட செயற்பாடுகள் என்பதே பெலாரஸின் நிலைப்பாடாக உள்ளது. இந்தச் சம்பவங்களின் போது நாட்டைவிட்டுத் தப்பியோடியவர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ள லுகஷெங்கொ அவர்களில் யாராவது பெலாரஸ் சட்டங்களுக்கு முரணான வகையில் செயல்பட்டிருந்தால் சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்ப முடியாது எனத் தெரிவித்துள்ளார். “எங்கள் நாட்டின் சட்டங்கள் கடினமானவை. ஆனால், சட்டம் சட்டமே” என அவர் தெரிவித்துள்ளார்.

தனது அண்டை நாடான உக்ரைனுடன் ரஸ்யா போரில் ஈடுபட்டுவரும் நிலையில் தனது நட்பு நாடான பெலாரஸில் ஒரு நிலையான ஆட்சி நீடிப்பது ரஸ்யாவைப் பொறுத்தவரை மிகவும் அனுகூலமானது. போரில் நேரடியாகப் பங்கெடுக்காது விட்டாலும் ரஸ்யப் படையினரைத் தங்கவைத்துக் கொள்ளவும் அணுவாயுதங்கள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தனது நாட்டில் நிலைநிறுத்திக் கொள்ளவும் பெலாரஸ் அனுமதி வழங்கியுள்ளது. தவிர, போர்க் கைதிகள் பரிமாற்றங்களின் போது பரிமாறிக் கொள்ளப்படும் ரஸ்யப் படையினரை தனது நாட்டிற்குள் அனுமதிக்கும் நடைமுறையையும் பெலாரஸ் பின்பற்றி வருகின்றது.

ரஸ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து பெலாரஸை மீட்டு(?) எடுப்பதற்கான மேற்குலகின் தொடர் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. அதேவேளை, மேற்குலகின் இத்தகைய தலையீடுகள் காணமாக பெலாரஸும் ரஸ்யாவும் மென்மேலும் நெருங்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.


நடந்து முடிந்த தேர்தலில் பெலாரஸ் மக்கள் சுயமாக வாக்களித்து தமக்கென ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். தேர்தல் முடிவை மேற்குலகம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ – எதிர்பாராத மாற்றங்கள் ஏதும் நிகழாது விட்டால் – லுகஷெங்கோ அடுத்த ஐந்து வருடங்களுக்கு பதவியில் நீடிக்கப் போகின்றார். தனது பதவிக் காலத்தில் ரஸ்யாவுடனான தனது நல்லுறவைத் தொடர்ந்தும் பேணப் போகின்றார். அவரே கூறியதைப் போன்று தேர்தல் முடிவை மேற்குலகம் ஏற்றுக் கொண்டால்தான் என்ன? ஏற்றுக் கொள்ளாவிட்டால்தான் என்ன? களத்தில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்பதே யதார்த்தம்.

– சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave A Reply

Your email address will not be published.