கருணைக் கொலைக்கு அனுமதி!
கர்நாடக மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் சிரமப்படும் நோயாளிகள் கண்ணியமாக இறப்பதற்கான உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், 2023ஆம் ஆண்டு இதற்கான விதிமுறைகளை உச்சநீதிமன்றமே வகுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அதன்படி தீராத நோய்களிலிருந்து குணமடைய வாய்ப்பின்றித் தவிக்கும் நோயாளிகள் கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக கருணைக் கொலையை அனுமதிப்பது குறித்து மூன்று மருத்துவர்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் என்றும் முதன்மை, இரண்டாம் நிலைக்குழுவில் தலா ஓர் அரசு மருத்துவர் இருப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.
“மாநிலத்தில் மாவட்டந்தோறும் இந்த மருத்துவர் நிபுணர் குழு அமைக்கப்படும். அந்த குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள், உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என உறுதி செய்வர். இந்நடைமுறைக்குப் பிறகு நோயாளி கண்ணியமாக உயிரிழக்க அனுமதி வழங்கப்படும்,” என்று அமைச்சர் குண்டுராவ் மேலும் தெரிவித்தார்.