மருத்துவமனையில் பாலியல் துஷ்பிரயோகம்: ஜெர்மனிய மருத்துவருக்கு கடுமையான தண்டனை.
பெண் நோயாளிகளுக்கு ‘கொலோனோஸ்கோப்பி’ மருத்துவச் சோதனைகளை மேற்கொண்டபோது அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது மருத்துவர் ஒருவருக்கு ஜெர்மானிய நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) ஆறரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.
மருத்துவர் பணியைத் தவறாகப் பயன்படுத்தி பெண் நோயாளிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வூல்ஃப்காங் எச் என்று அடையாளப்படுத்தப்பட்ட அந்த ஆடவர் மீது 17 குற்றங்கள் நிரூபணமாகின.
அரசாங்க வழக்கறிஞர்கள், அந்த ஆடவருக்கு எட்டு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கும்படி கோரியிருந்தனர்.
2017க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பலமுறை ‘கொலோனோஸ்கோப்பி’ சோதனைகளின்போது பெண்களின் பெண்ணுறுப்புகளுக்குள் அந்த மருத்துவர் தமது கைவிரலை நுழைத்தது கண்டறியப்பட்டது. ஜெர்மன் சட்டத்தின்கீழ் இது பாலியல் வன்கொடுமை குற்றமாகத் தண்டிக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியது.
அப்பெண்களின் குடல்கள் சோதிக்கப்பட்டபோது வலியைக் குறைக்க அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. அந்த மருத்துவரின் செயலை மருத்துவ உதவியாளர்கள் கவனித்தனர்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்த அந்த ஆடவர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவரின் தற்காப்பு வழக்கறிஞர் கூறியதை ஜெர்மானிய ஊடகம் ஒன்று மேற்கோள் காட்டியது.
‘கொலோனோஸ்கோப்பி’ சோதனைகளின்போது பெண் நோயாளிகளுக்கு நேர்ந்த அவலத்தைக் கண்டறிந்த பெண் மருத்துவ ஊழியர்கள் நால்வர், குற்றங்கள் புரியப்பட்ட சிறிது காலம் கழித்து அவற்றை அம்பலப்படுத்தினர்.
மருத்துவர் பணியைத் தொடர அந்த ஆடவருக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் மேலும் குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இல்லை என்பதை அது சுட்டியது.