இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என விஜய் சேதுபதிக்கு தமிழக முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தது. இதையடுத்து நேற்று முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி கொள்வது தான் அவருடைய திரையுலக வாழ்க்கைக்கு நல்லது என்றும், அதை தான் விரும்புவதாகவும் கூறினார். அதை மேற்கொள்காட்டி விஜய் சேதுபதியும் 800 படத்திலிருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியை 800 படத்திலிருந்து விலக வலியுறுத்தி மர்ம ஆசாமி ஒருவர் அவருடைய மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து ட்வீட் செய்த விவகாரம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

800 (கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு) படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிவிட்டரில் ஒருவர், விஜய் சேதுபதியின் சிறுவயது மகளுக்கு எதிராக கற்பழிப்பு அச்சுறுத்தலை விடுத்துள்ளார். இதேபோல் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ஐந்து வயது மகளுக்கு பாலியல் பலாத்காரம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்களை  கேள்விப்பட்டு என் மனம் கொந்தளிக்கிறது.இத்தகைய கீழ்த்தரமான செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்சேதுபதி மற்றும் தோனியின் செயல்பாடுகளில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால், அதை அவர்களிடம் நாகரிகமான முறையில் தெரியப்படுத்துவது தான் மனித தன்மை. அதை விடுத்து அவர்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது. இத்தகைய கருத்து பரிமாற்றங்கள் சமூகத்தில் தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

சமூகவலைத்தளங்களை அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்தலாமே தவிர , இத்தகைய கீழ் செயல்களுக்கு பயன்படுத்த கூடாது.தோனி மற்றும் விஜய் சேதுபதி மகள் குறித்து கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். பெண் குழந்தைகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும், கீழ்த்தரமான கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.  அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை இனி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் வெளியிடும் அனைவருக்கும், ஒரு பாடமாக அமையும்படியான தண்டனையை வழங்க வேண்டும்.