ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றாரா? உண்மை என்ன?
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நல்லெண்ண சந்திப்பு மற்றும் வேறு சில நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மூன்று ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியதாகக் கூறி சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
இருப்பினும், பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பயணத்திற்கு பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான எந்தவொரு ஹெலிகாப்டரையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு தனது காரில் சென்றதற்கான ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சமூக ஊடகங்களில் பரவும் இந்த செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என்பது தெரிய வருகிறது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த சில நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மூன்று ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியதாகக் கூறி வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது பரவி வருகின்றன.
இருப்பினும், அந்த வீடியோவில் உள்ள ஹெலிகாப்டர்களில் யார் பயணம் செய்கிறார்கள் என்பதை குறிப்பிட முடியாது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேர்ணல் எம்.பி.பி. நளின் ஹேரத், ஜனாதிபதி சம்பந்தப்பட்ட யாழ்ப்பாண பயணத்திற்கு எந்தவொரு விமானத்தையும் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கீகனகேவிடம் கேட்டபோது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அந்த பயணத்திற்கு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எந்தவொரு ஹெலிகாப்டரையும் பயன்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.
மேலும், ஜனாதிபதி பயன்படுத்தியதாகக் கூறி சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படும் வீடியோவில் உள்ள ஹெலிகாப்டர்கள் எம்ஐ 17 மற்றும் 412 ரக ஹெலிகாப்டர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த ஹெலிகாப்டர்கள் குறைந்தபட்சம் இந்த சுதந்திர தினத்திற்கு கூட பயன்படுத்தப்படவில்லை என்றும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.