இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.
கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளதுடன் அந்தப் பிரதேசத்தில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டு, வர்ண மின் குமிழ்கள் ஒளிர விடப்பட்டு சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை அனைத்து விசேட மத வழிபாடுகளும் அந்தந்த வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்பட்டு காலை 8 மணிக்கு சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.
அநுர குமார திசாநாயக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரது தலைமையில் நடைபெறும் முதலாவது சுதந்திர தின நிகழ்வு இதுவாகும்.
அதன்படி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஜனாதிபதி சுதந்திர சதுக்கத்திலிருந்து நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.
சுதந்திர தின நிகழ்வுக்கு அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள், பல்வேறுதுறை சார்ந்த முக்கியஸ்தர்களும் அழைக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை பெருமளவிலான பொதுமக்களும் சுதந்திர தின விழாவை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை, சுதந்திர தின நிகழ்வுகள் வெகு சிறப்பாகவும் அதேவேளை, எளிமையான முறையிலும் நடத்தப்படுவதுடன் வீண் விரயங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
வழமைக்கு மாறாக இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை பெருமளவான பொதுமக்கள் கண்டுகளிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பைக் கருதி வழமையான சோதனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் பொதுமக்கள் விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.