சர்வதேச சமூகத்துக்கு அடிபணியாது இலங்கை – கம்மன்பில திட்டவட்டம்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்தபோது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாக எமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார். தற்போது அவரே ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். எனவே, இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது என்ற தீர்க்கமான உத்தரவாதத்தை வழங்குகின்றோம்.”
– இவ்வாறு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று இணைவழி மூலம் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.
கேள்வி:- தற்போதை அரசு எம்.சி.சி. ஒப்பந்தத்தில் ஒருபோதும் கையெழுத்திடப் போவதில்லை என்று பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்துள்ளது. இம்மாத இறுதியில் நாட்டுக்கு வரவுள்ளார் என்று கூறப்படும் அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதி இதனை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்தால் அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்:- 2009இல் பிரிட்டன் வெளிநாட்டலுவல்கள் செயலாளரும், பிரான்ஸ்ஸின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரும் இலங்கைக்கு வந்து போரை நிறுத்துமாறு அழுத்தம் பிரயோகித்தனர். ஆனால், போர் நிறுத்தப்படவில்லையல்லவா? எனவே, தற்போதைய அரசு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது தமக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக வந்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாக இலங்கை சுயாதீனத்தன்மையும் இறையாண்மையும் உடைய நாடு என்பதைக் காண்பித்தார்.
தற்போது அவரே ஜனாதிபதியாகவுள்ளார். எனவே, இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது என்ற தீர்க்கமான உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியும்” – என்றார்.