டிரம்புடன் மோதும் நாமல் ராஜபக்ஷ
இலங்கையில் அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை கையாண்ட விதம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூலம் நிதி பெற்று திட்டங்களைச் செயல்படுத்திய அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற தரப்பினர் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவின் விவரம் கீழே:
“உலகம் முழுவதும் பல திட்டங்களுக்கு USAID நிதி வழங்கியுள்ளது. ஆனால், மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சைக்குரிய மையமாக மாறியுள்ளது. மனிதாபிமான உதவி என்ற போர்வையில் அவர்களின் நிதிகள் மற்ற நாடுகளில் குழப்பத்தையும், நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இலங்கைக்கு மட்டும் சமீபத்திய ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டாலர்கள் நிதி மற்றும் மானியங்கள் கிடைத்துள்ளன. 100க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் இந்த நிதியைப் நேரடியாகப் பெற்றன. அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் USAID இலிருந்து பலன்களைப் பெற்றனர்.
அவர்கள் தங்களது மானியங்கள் மற்றும் உதவிகள் மூலம் பல துறைகளில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்த நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த தெளிவான அறிக்கைகள் இல்லை.
USAID இன் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்தி நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன். அவற்றிலிருந்து பயனடைந்த இந்த அரசு சாரா நிறுவனங்கள் பற்றிய விரிவான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கான விதிமுறைகள் பல ஆண்டுகளாக முன்மொழியப்பட்டாலும், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. வெளிப்படைத்தன்மையை பராமரிக்க இந்த விதிமுறைகளை கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.”