லசந்த கொலை வழக்கு: சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரை.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக சந்தேக நபர்களாகக் குறிப்பிடப்படும் மூவர் மீது மேலும் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்றும் எனவே அவர்களை விடுவிக்கலாம் என்றும் கல்கிஸ்ஸ நீதவானுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்குத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 27ஆம் தேதி சட்டமா அதிபர் அனுப்பிய கடிதத்தில், இது குறித்து நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை செய்த பிறகு, நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகள் 14 நாட்களுக்குள் தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்க பரிந்துரைக்கப்படும் சந்தேக நபர்கள் இராணுவ சார்ஜென்ட் பிரேம் ஆனந்த உதலாகம, உதவி பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸசிரி சுகதபா மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் ஆவர்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள், கடந்த காலங்களில் நடந்த அரசு குற்றங்கள் ஒருபோதும் வெளிச்சத்துக்கு வராது என்ற சந்தேகம் வலுவடைந்து வருவதாகக் கூறுகின்றனர்.
தொடர்புடைய ஆவணங்களுடன் மேலும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.