டிரம்ப்புக்குப் பதிலடி; அமெரிக்கப் பொருள்களுக்குப் புதிய வரி விதித்த சீனா.
தனது தயாரிப்புகள்மீது அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருள்களின்மீது புதிய வரிகள் விதிக்க இருப்பதாகச் சீனா செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) தெரிவித்துள்ளது.
இதன்மூலம், உலகின் மிகப் பெரிய பொருளியலைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதல் இரு இடங்களில் இருக்கும் அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கிடையே இருந்த வர்த்தகப் போரை மீண்டும் புதுப்பித்துள்ளன.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களைத் தடுக்க சீனா போதுமான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அமெரிக்க அதிபர் சீனப் பொருள்களுக்கு எதிரான கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருள்கள்மீதான கூடுதல் 10 விழுக்காடு வரி விதிப்பு சிங்கப்பூர் நேரப்படி பிப்ரவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைக்கு வந்தது.
கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்த சில நிமிடங்களில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் ‘எல்என்ஜி’ எனும் திரவ இயற்கை எரிவாயுக்கு 15 விழுக்காடு வரியும், கச்சா எண்ணெய், விவசாயப் பொருள்கள் உள்ளிட்டவற்றிற்கு 10 விழுக்காடு வரியும் விதிக்கப்படும் எனச் சீன நிதி அமைச்சு கூறியது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின்மீது விதிக்கப்படவிருக்கும் இந்தப் புதிய வரிகள் இம்மாதம் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அது கூறியுள்ளது.
அதுமட்டுமன்றி, நாட்டின் வளங்களைப் பாதுக்காக்கும் பொருட்டு டங்ஸ்டன், டெல்லூரியம், ருத்தேனியம், மாலிப்டினம் போன்ற அரிய தாதுக்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனச் சீனாவின் வர்த்தக அமைச்சும் அதன் சுங்க நிர்வாகமும் தனித்தனியே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
இதற்கிடையே, அமெரிக்காவின் ஆகப்பெரும் வர்த்தக பங்காளிகளாக இருக்கும் மெக்சிகோ, கனடா மீதான 25 விழுக்காடு வரிவிதிப்பு நடவடிக்கையை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி 3ஆம் தேதி தெரிவித்தார்.
எனினும், சீனாவுக்கு எதிரான வரி விதிப்பு தொடரும் என்றும் அது விரைவிலேயே, சில மணிநேரங்களில், நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எல்லைப் பிரச்சினையில் அந்த இரண்டு நாடுகளும் சலுகைகளை அறிவித்துள்ளதாலும் குற்றச்செயல்களை தடுக்க உதவி புரிவதாக கூறியதாலும் இந்த நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
எனினும், சீனாவுக்கு எதிரான வரி விதிப்பு தொடரும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபரும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இவ்வாரம் பேச்சு நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் கூறினார்.