கிராமி விருது வென்ற தமிழர் (Videos)

இந்திய வம்சாவளி பாடகியான சந்திரிகா டாண்டனின் ‘திரிவேணி’ இசைத் தொகுப்பு ‘சிறந்த தற்கால ஆல்பம்’ பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது.

இசைத் துறையில் மிகப்பெரிய பெருமையாகக் கருதப்படும் கிராமி விருதை வென்ற 71 வயது சந்திரிகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியப் பண்பாட்டின் மீதான 71 வயது சந்திரிகாவின் ஆர்வத்தைக் குறிப்பிட்ட மோடி, ‘அவரது சாதனைகளில்’ நாடு பெருமிதம் கொள்கிறது என்று திங்கட்கிழமை (பிப்ரவரி 3) சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.

பாப், ராக், நாட்டுப்புற இசை, ஜாஸ் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு கிராமிய விருது அளிக்கப்படுகிறது.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன், பெப்சி நிறுவன முன்னாள் தலைவர் இந்திரா நூயியின் சகோதரி. சென்னை கிறிஸ்டியன் காலேஜ், அகமதாபாத் ஐஐஎம்- இல் படித்த அவர், நியூயார்க், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார். அமெரிக்க கலை, அறிவியல் அகாடமியில் உறுப்பினராக உள்ளார். 2005ல் சோல் சாண்ட் மியூசிக் (Soul chants music) என்ற இசை லேபிள் நிறுவனத்தை துவங்கிய அவர், கென்டகி சென்டர், லின்கன் சென்டர், டைம்ஸ் ஸ்குவேர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

நிகழ்ச்சியில் கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி திரட்டும் இடம்பெற்றது.

அனைத்துலக தொழிலதிபரான சந்திரிகா, கொடையாளராகவும் உள்ளார்.

“சென்னையில் வசித்தபோது வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்கள்தான் நான் கேட்ட முதல் இசை. அப்போது சென்னையில் இரண்டு வானொலி நிலையங்கள் இருந்தன. அவற்றின் மூலமாகவே இசை கேட்டு பழகினேன். என் தாயார் காலை முதல் இரவு வரை தொடர்ந்து வானொலி கேட்டுக்கொண்டே இருப்பார். அப்படித்தான் இசை எனக்கு அறிமுகம் ஆனது,” என்று சந்திரிகா தெரிவித்துள்ளார்.

விருது வென்றது குறித்துப் பேசிய அவர், “இசை என்பது காதல், ஒளி, சிரிப்பு. நாம் அனைவரும் அன்பு, ஒளி, சிரிப்பால் சூழப்பட்டிருப்போம். நான் இசை மூலம் என் திறமையைக் கண்டுபிடித்தேன்,” என்றார்.


Leave A Reply

Your email address will not be published.