குடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் ; தீர்வு என்ன? : ஷிரோமா சில்வா, தாலியா பிராங்கோ
இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் போன்ற பல்வேறு உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கம் அமலானதில் இருந்து, குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இதுபோன்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்து வருகின்றன.
ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், இருப்பிடத்தை கண்காணிக்கும் செயலிகள், ஒருவரது கணினி சார்ந்த செயல்பாடுகளை ரகசியமாக கண்காணிக்கும் கீ-லாகிங் மென்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதுடன் அவர்களை நோட்டமிடவும் விஷமிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக புகாரளிப்பவர்களில் 70 சதவீதம் பேர், தொழில்நுட்ப சாதனங்களை மையமாக கொண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக “ரெபியூஜி” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது.
இந்த நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளான இருவர், தங்களது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.
இருவரது வேண்டுகோளின்படி, அவர்களது பெயர்கள் இந்த கட்டுரையில் மாற்றப்பட்டுள்ளன.
“அவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோதுதான், அவர் என்னை கண்காணிக்க ரிங் டோர் பெல் கேமராவைப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறிந்தேன்,” என்று கேட் கூறுகிறார்.
அமேசானின் இணையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு சாதனத்தை அவர் குறிப்பிடுகிறார். இது ஒரு வீட்டின் முன்னால் ஏதாவது நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் அளிப்பதுடன், அதன் நேரலை அல்லது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை, உலகின் எந்த மூலையில் இருந்தும் காண்பதற்கு வழிவகை செய்கிறது.”
“நான் அந்த பாதுகாப்பு சாதனத்தை செயலிழக்க செய்ய முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், ‘நீ குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறாய்’ என்று அவர் கூறுவார்.
“இது இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் நான் மோசமான தாய் என்று அவர் காவல்துறையில் முறையீடு செய்துவிடுவாரோ என்று நான் அச்சமடைந்தேன்,” என்கிறார் கேட்.
இன்னொரு பெண்ணான சூ, தனது கணவர் அமேசான் வர்ச்சுவல் அசிஸ்டன்ட் கருவியை பயன்படுத்தி எங்கிருந்தோ இருந்தபடி, தனது உரையாடல்களை கண்காணித்து வந்ததாக கூறுகிறார்.
“அமேசானின் பல்வேறுபட்ட அலெக்சா கருவிகள் எங்களது வீடு முழுவதும் இருந்தன. எனது கணவர் அவையனைத்தையும் இணைத்து ஒரே கணக்கிலிருந்து கண்காணிப்பார். மேலும், அவரால் இவற்றை பயன்படுத்தி வீட்டில் உள்ளவர்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.”
இது ஒருபுறமிருக்க, கொரோனா பொது முடக்க காலத்தில் ஆண்களும் இதுபோன்ற பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பிரிட்டனில் சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்தாயிரம் கூடுதல் அழைப்புகளை ஆண்களிடமிருந்து பெற்றதாக அந்த நாட்டை சேர்ந்த ஆலோசனை அமைப்பு கூறுகிறது.
ஆனாலும், இன்னமும் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
பிரிட்டனில் சென்ற ஆண்டு பதிவான 75 சதவீத குடும்ப வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என்று தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை பொறுத்தவரை, இந்த ஆண்டின் மார்ச் மாதம் 23ஆம் முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தால் பெறப்பட்ட குடும்ப வன்முறை சார்ந்த புகார்களின் எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
‘மேலாண்மை செய்யும் ஆண்கள்’
“இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருக்கும் ஆண்களே வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை வாங்குபவராகவும் அதை நிர்வகிப்பவராகவும் இருக்கின்றனர்” என்று லண்டனை சேர்ந்த பேராசிரியர் லியோனி டான்செர் கூறுகிறார்.
“இதன் காரணமாக அவர்கள், தங்களது சுற்றுப்புறம் மட்டுமின்றி தொழில்நுட்ப சாதனங்களின் மேலாண்மையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்” என்கிறார் அவர்.
பேராசிரியர் லியோனியின் கருத்தை கேட் மற்றும் சூ ஆகிய இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
“நான் வீட்டை விட்டு ஓரடி வெளியே சென்றாலும், அவரால் எனது ஸ்மார்ட் வாட்ச் அல்லது திறன்பேசி அல்லது ஐபாட் அல்லது வேறெதாவது தொழில்நுட்ப சாதனத்தை கொண்டு எனது இருப்பிடத்தை அறிய முடியும். எனது வாழ்க்கையிலும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் எனக்கு குறைவான கட்டுப்பாடு இருப்பதையும், அவர் ஆதிக்கம் செலுத்துவதையும் பார்க்கும்போது, இதிலிருந்து மீண்டுவர வேண்டுமென்று தோன்றுகிறது” என்று சூ கூறுகிறார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் எப்படி, எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் பிடி இருப்பதால், அதை கொண்டே குடும்ப வன்முறை உள்ளிட்ட சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெற முடியும்.
ஆனால், இதுபோன்ற சேவைகளினால் குறிப்பிட்ட நபர் மென்மேலும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதாக ரெபியூஜி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகிறது.
“குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காகவும், உதவுவதற்காகவும் திறன்பேசி செயலிகளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்களை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், அவை எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக, அதாவது பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடம் உள்ளிட்டவற்றை சமரசம் செய்து அவர்களுக்கு மென்மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் உண்டு.”
முன்னெப்போதுமில்லாத வகையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக பலரும் அதிக நேரத்தை வீடுகளில் செலவிடுகின்றனர். இதனால், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றிலுள்ள மென்பொருட்கள், சேவைகளை பலரும் பயன்படுத்தும் சூழ்நிலை நிலவுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், உறவுகளில் பிளவு ஏற்பட்டால் என்னவாகும் என்று செயலிகளை உருவாக்குபவர்கள் நினைத்து பார்க்க வேண்டுமென்று கேட் கூறுகிறார்.
“பொதுவாக தொழில்நுட்ப கருவிகளில் ஒரேயொரு மின்னஞ்சல் கணக்கை கொண்டே சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உறவில் பிரச்சனை ஏற்பட்டு பிளவு ஏற்படும்போது, இன்னொரு நபர் தனது கணக்கையோ அல்லது சேவைகளையோ பயன்படுத்துவதில் சிக்கல் நேரிடும்” என்று அவர் கூறுகிறார்.
பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படும் சுமை
குடும்ப வன்முறைகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதற்கான பணியில், ஐபிஎம் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
தங்களது ஆய்வின் மூலம் தெரியவந்த விடயங்களை கொண்டு, மற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கான வடிவமைப்பு கொள்கைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பின் விளைவுகளை குறித்து சிந்திக்க வேண்டும் என்பதைவிட அவற்றால் இலக்கு வைக்கப்படுபவர்கள் அதன் இயக்கம் குறித்த விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டியது அவசியமென்று அடிக்கடி வலியுறுத்தப்படுவதாக அது கூறுகிறது.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய ஐபிஎம்மின் லெஸ்லி நுட்டால், “தொழில்நுட்ப கருவிகள் அல்லது சேவைகளின் பாதுகாப்பில் உள்ள சுமை அதன் பயன்பாட்டாளரின் தோள்களில் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வடிவமைப்புக்கும்போதே சில பொறுப்புகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.
வீட்டிலுள்ள தொழில்நுட்ப சாதனங்களை தொலைதூரத்திலிருந்து இயக்கும்போது அதுகுறித்த எச்சரிக்கை ஒலி அந்த சாதனத்திலிருந்து எழுப்பப்பட வேண்டுமென்றும், மேலும் அதன் செயல்பாட்டை நிறுத்துவதற்கான வசதியும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறுகிறார்.
“வீட்டிலுள்ள அனைத்து நபர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நிறைய தொழில்நுட்ப சாதனங்கள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சியான சூழ்நிலை குடும்ப வாழ்க்கையில் பல வேறுபாடுகள் இருப்பதை அங்கீகரிக்கவில்லை” என்று அவர் கூறுகிறார்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோர்கள் பலர் ஒருங்கிணைந்த செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற செயலிகள் எண்ணற்ற தகவல்களை பகிர்வதால் சில வேளைகளில் அவை தவறாக பயன்படுத்தப்பட்டு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன.
“இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் தங்களது தொழில்நுட்ப சாதனங்களில் பல சிறுசிறு தகவல்களை ஒருவருக்கொருவர் அணுக முடிவது பிரச்சனைகளுக்கும் வித்திடுகிறது. ஒருவேளை இது மற்றவர்களை துன்புறுத்தும் ஒருவரிடம் கிடைத்தால், திறன்பேசியில் பேட்டரி இல்லை என்று எளிதில் பொய் சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிவிட முடியாது” என லெஸ்லி கூறுகிறார்.
நன்றி: பிபிசி