தமிழ்நாட்டில் ஜிபிஎஸ் நோய் பாதிப்பால் 9 வயது சிறுவன் பலி!
ஜிபிஎஸ் நோய் தொற்றால் தமிழ்நாட்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஜிபிஎஸ் நோய்
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக GBS(Guillain-Barre Syndrome) என்னும் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவரும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சிறுவனுக்கு தொற்று
திருவள்ளூரை அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரேம்குமாரின் 9 வயது மகன் மைதீஸ்வரன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பள்ளிக்கு கிளம்பிய போது அவருக்கு 2 கால்களும் நடக்க முடியாமல் அவதிக்குள்ளானார்.
இதையடுத்து, அவரது பெற்றோர் வீட்டின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்துக்கு நடைப்பயிற்சி செல்ல அறிவுறுத்தினர். அங்கு நடை பயிற்சி சென்ற அவர் 2 கால்களும் செயலிழந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் வீட்டுக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனடியாக பிரேம்குமார் தனது மகனை வேப்பம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு மாத்திரைகள் வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னரும் கால்கள் சரியாகாத நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிறுவனுக்கு ரத்த மாதிரி, சிறுநீர் மாதிரி சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுவனுக்கு நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அரிய நோயான ஜிபிஎஸ் என அழைக்கப்படும் ‘கிலான் பாரே சின்ட்ரோம்’ நோய் தொற்று பரவியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.
சிறுவனுக்கு இம்யூனோகுளோபளின் மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்தார். ஜிபிஎஸ் நோயின் தீவிரத்துடன் இதய பிரச்சினையும் இருந்ததால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
அறிகுறிகள்
இது தொற்று நோய் இல்லை என்பதால் இது குறித்து அச்சமடைய தேவையில்லை. சிகிச்சை பெற்றால் முழுமையாக குணமடையலாம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் குணமடைந்து விடுகின்றனர். உடலில் வேறு சில பாதிப்புகளும் இருக்கும்பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது என கூறப்படுகிறது.
தரமற்ற உணவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்பட பல்வேறு காரணங்களால் இந்த நோய் தொற்று ஏற்படுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இதன் முதல்கட்ட அறிகுறிகளாகவும், மூட்டு வலி, முதுகு வலி, கைகால்கள் மரத்துப் போதல், பலவீனமாக உணர்தல், மூச்சு விடுதல், பேசுதல் மற்றும் விழுங்குதலில் சிரமம் ஆகியவை தீவிர அறிகுறிகளாகவும் கருதப்படுகிறது.