இன்றைய நாளுக்கான கத்தோலிக்க வாசகமும் நற்சிந்தனையும்

பொதுக்காலம் 29ஆம் வாரம்  

– புதன் 21 10 2020 

எபேசியர் 3: 2-12 

“கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன்” 

நிகழ்வு 

ஒருநாள் அமெரிக்காவைச் சார்ந்த பார்வையற்றவரும் காதுகேளாதவரும் பேச்சற்றவருமான ஹெலன் கெல்லர் (1880- 1968), ராபர்ட் ப்ரூக்ஸ் என்ற மறைப்பணியாளரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஹெலன் கெல்லரிடம் அவருக்குப் புரிகின்ற வகையில், எளிய வார்த்தைகளில் இயேசுவைப் பற்றி எடுத்துச் சொன்னார்.

ராபர்ட் ப்ரூக்ஸ் இயேசுவைப் பற்றி எடுத்துச் சொன்ன பிறகு, ஹெலன் கெல்லர் அவரிடம், “இப்படியொரு மனிதர் இருப்பார் என்று எனக்குத் தோன்றியது. இப்பொழுது நான் அந்த மனிதரின் பெயரைத் தெரிந்துகொண்டு, அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் புரிந்துகொண்டேன்” என்றார்.

ஆம், ஹெலன் கெல்லர் ராபர்ட் ப்ரூக்ஸ் என்ற மறைப்பணியாளர் மூலம் இயேசுவைப் பற்றி நன்றாகப் புரிந்துகொண்டார். இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை இறைவெளிப்பாட்டின் மூலம் புரிந்துகொண்டேன் என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளைப் புரிந்துகொண்ட பவுல்

ஒரு காலத்தில் பவுல் கிறிஸ்தவர்களைக் கூண்டோடு அழிக்க நினைத்தார். அப்படிப்பட்டவர் தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் ஆண்டவரால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்; இறைவெளிப்பாட்டின் வழியாக, மறைபொருளானது அவருக்கு வெளிப்படுத்தப்பட்டது (திப 9: 15; கலா 1: 16). அதைத்தான் இன்றைய வாசகத்தில் புனித பவுல், “….கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்” என்கின்றார்.

இங்குப் புனித பவுல் கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன் என்று சொல்கின்றாரே, அந்த மறைபொருள் என்ன? அந்த மறைபொருளைப் புரிந்துகொண்டு நாம் எத்தகைய வாழ்க்கை வாழவேண்டும்? என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வழியாக பிற இனத்தாரும் உடன் உரிமையாளர் ஆகின்றனர்

கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருள் என்று புனித பவுல் சொல்வது இதுதான்: “நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும், கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகின்றார்.” இத்தகைய மறைபொருள் யூதருக்கும் பிற இனத்தாருக்கும் இடையே இருந்த வேறுபாட்டை, ஏற்றத்தாழ்வைக் களைவதாக இருக்கின்றது. யூதரும் பிற இனத்தாரும் தங்களுக்குள் பிளவுபட்டுக் கிடந்தார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஆண்டவர் இயேசு இரண்டு இனத்தாரையும் பிரித்து நின்ற பகைமை என்ற சுவரை, தமது உடலின் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவரை ஒன்றுபடுத்தினார். இதன்மூலம் அவர்கள் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்களிகளும் ஆகின்றனர்.

யூதர்கள் பிற இனத்தாரை நாயினும் கீழாக நினைத்து வந்த வேளையில், யூதர்களும் பிற இனத்தாரும் ஒரே உடலின் உறுப்புகள் என்று புனித பவுல் சொல்வது ஒரு புரட்சிகரமான சிந்தனை என்றே சொல்லலாம். அது எந்த விதத்தில் புரட்சிகாரணமான சிந்தனை. அது நம்மை என்ன செய்யத் தூண்டுகின்றது என்பன குறித்துச் சிந்திப்போம்.

நாம் ஒரே உடலின் உறுப்புகள் 

இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில்கூட மனிதர்கள் சாதியின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில் சகமனிதர்களிடம் வேறுபாடு பாரிக்கின்றார்கள். அப்படியென்றால் இரண்டாம் ஆண்டுகளுக்கு முன்பாகத் தங்களைத் தூய்மையான இனம் என்று சொல்லிக்கொண்ட யூதர்கள் பிற இனத்தாரை எப்படியெல்லாம் நடத்தியிருப்பார்கள் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

யூதர்கள், மற்றவர்களை விடத் தங்களை உயர்ந்தர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த வேளையில்தான், புனித பவுல் நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள் என்று கூறுகின்றனர். நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள் என்றால், யாரும் யாரையும் தாழ்ந்தவராகவோ, இழிவானவராகவோ பார்க்கக்கூடாது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டால், யாரும் யாரையும் தாழ்த்திப் பேசமாட்டார்.

நாம் கிறிஸ்துவின் உறுப்புகளாக இருக்கின்றோம் என்ற உண்மையை உணர்ந்து வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை 

‘இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்’ (கலா 3: 28) என்பார் புனித பவுல். ஆகையால், நற்செய்தியின் வழியாக கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர், ஒரே உடலின் உறுப்புகள் ஆகிவிட்டோம் என்ற உணர்வோடு நாம் ஒன்றாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

– அருட்திரு. மரிய அந்தோணிராஜ் அடிகளார் 

Leave A Reply

Your email address will not be published.