சதோச லொரிகளில் 43ஐ ஒரே நேரத்தில் இரண்டு கொள்வனவாளர்களுக்கு விற்ற முந்தைய அரசாங்கம்
கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 51 லொரிகளில் 43ஐ ஒரே நேரத்தில் இரண்டு கொள்வனவாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 நவம்பர் முதல் 2024 ஜனவரி வரை திறந்த சந்தை விலை அறிவிப்புகள் மூலம் இந்த லொரிகள் விற்கப்பட்டுள்ளன. லொரிகள் விற்பனை மூலம் 18 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 149 ரூபாய் (18,39,85,149) பெறப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 37 லொரிகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் நிறுவனத்தின் போக்குவரத்து பிரிவில் பயன்பாட்டில் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த வாகனங்கள் இயற்கை பேரழிவுகளுக்கு உள்ளாகி சுமார் ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிள்ளன. தற்போது அந்த வாகனங்கள் துருப்பிடித்து வருவதாக தணிக்கை கூறுகிறது. நிறுவனத்தில் இல்லாத 2 லொரிகள் ஓராண்டுக்கும் மேலாக பழுதுபார்க்கும் பணிகளுக்காக கேரேஜுக்கு அனுப்பப்பட்டிருந்துள்ளன.
கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தை கலைப்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்காக அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று 2023 ஜூலை 10 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
இந்த குழுவின் அறிக்கை 11 மாத தாமதத்துடன் 2024 ஆகஸ்ட் 23 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. சதோசவை கலைக்க 2024 செப்டம்பர் 02 ஆம் தேதி அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் 2024 அக்டோபர் 31 வரை அமைச்சரவையின் முடிவு செயல்படுத்தப்படவில்லை.
கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையின் மூலம் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.