சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் பேச அவசரப்படவில்லை: டிரம்ப்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் பேச அவசரப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) தெரிவித்தார்.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிபர் டிரம்ப் அண்மையில் 10 விழுக்காடு வரி விதித்தார்.
இதற்குப் பதிலடி தரும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, திரவ வடிவில் உள்ள இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது சீனா 15 விழுக்காடு வரி விதித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய். விவசாய இயந்திரங்கள், பெரிய இயந்திரங்களைக் கொண்ட வாகனங்கள், பிக்அப் லாரிகள் ஆகியவை மீதும் சீனா 10 விழுக்காடு வரி விதித்துள்ளது.
ஏட்டிக்குப் போட்டியாக இருநாடுகளும் வரிவிதிப்பை அறிவித்துள்ளபோதிலும் சீன அதிபரை உடனடியாகச் சந்தித்துப் பேசும் அவசியம் ஏற்படவில்லை என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க பொருள்கள் மீது சீனா வரி விதிப்பது பற்றி அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “பரவாயில்லை,” என்று பதிலளித்தார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கலந்துரையாடலுக்கு சீன வெளியுறவு அமைச்சு புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) அழைப்பு விடுத்தது.
“தற்போதைய சூழ்நிலையில், ஒருதலைப்பட்சமான, கூடுதல் வரிகள் தேவையில்லை. சமத்துவம், பரஸ்பர மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடலும் ஆலோசனையும் தேவைப்படுகின்றன,” என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் திரு லின் ஜியான் கூறினார்.
இந்நிலையில், சீன அதிபரை அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேச இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கெரோலைன் லேவிட் பிப்ரவரி 3ஆம் தேதியன்று தெரிவித்தார்.
ஆனால் அந்தச் சந்திப்பு எப்போது நிகழும் எனத் தமக்குத் தெரியாது என்றார் அவர்.