’20’ திருத்தம் குறித்து எந்த நாடும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது! – ரம்புக்வெல

“அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.”
– இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று இணைய வழி மூலம் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
கேள்வி:- 20ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா ஏதேனும் அழுத்தங்களை பிரயோகித்துள்ளதா?
பதில்:- 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது. இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது. எமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கும் அரசாகவே நாம் செயற்படுவோம்.
கேள்வி:- அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளனர் என்று கூறப்படுகின்றது. அவரது வருகை உறுதிப்படுத்த முடியுமா? அவர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவார்களா?
பதில்:- அவரது வருகை அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தக் காரணியையும் கவனத்தில்கொண்டு சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளையும் கவனத்தில்கொண்டு அவரது வருகை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வெளிநாட்டிலிருந்து வரும் இராஜதந்திரகள் 24 மணித்தியாலங்கள் மாத்திரமே நாட்டில் தங்கியிருப்பார்களாயின் அவர்களை ஒரே இடத்தில் சந்தித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டம் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கமையவே அவரது வருகையும் அமைந்துள்ளது.