ஈடர்னல் (Eternal) எனப் பெயரை மாற்றிய சொமாட்டோ!

உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ நிறுவனம் தனது பெயரை மாற்றியுள்ளது.

சொமாட்டோ நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக ஈடர்னல் (Eternal) எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

சொமாட்டோ, பிளிங்கிட், டிஸ்ட்ரிக் (லைஃப் ஸ்டைல் செயலி), ஹைபர்பியூர் ஆகிய நிறுவன சேவைகளை உள்ளடக்கியதாக ஈடர்னல் நிறுவனம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பங்குதாரர்களை சுட்டிக்காட்டி சொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”ஈடர்னல் என்ற பெயரை நிறுவனத்துக்கும் (சொமாட்டோ) செயலி பயன்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்த்துவதற்காக ஆரம்பத்தில் பயன்படுத்திவந்தோம்.

பின்னர் சொமாட்டோவை பொதுவெளியிலும் ஈடர்னல் எனப் பெயர் மாற்றம் செய்ய நாங்கள் யோசித்தோம். நம் எதிர்காலத்தின் முக்கிய இயக்கியாக சொமாட்டோ மாறியது.

இன்று பிளிங்கிட் உடன் நாங்கள் இணைந்து இருப்பதை உணர்கிறோம். சொமாட்டோ நிறுவனத்துக்கு ஈடர்னல் என மறுபெயரிட விரும்புகிறோம். ஆனால், சொமாட்டோ என்ற பெயரிலேயே செயலி இயங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சொமாட்டோ நிறுவனத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு தீபிந்தர் கோயல் மறுப்பு தெரிவித்தார். நிர்வாகப் பணி மற்றும் செயலி பயன்பாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள ஈடர்னல் என்ற பெயர் பயன்படுத்தி வருவதாகக் கூறியிருந்தார். தற்போது அந்தப் பெயரையே சொமாட்டோ நிறுவனத்தின் மாற்றுப் பெயராக அறிவித்துள்ளார்.

ஈடர்னல் என்ற பெயர் பொதுவெளி பயன்பாட்டில் சொமாட்டோவின் மாற்றுப் பெயராக இருக்கும் என்றும் செயலியில் சொமாட்டோ பெயர் மாற்றப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குச் சந்தையில் ஈடர்னல் என்ற பெயரில் பங்குகள் பரிமாற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.