மோசடி நிலையங்களிலிருந்து 60 பேர் மீட்பு

மியன்மாரின் மோசடி நிலையங்களிலிருந்து மீட்கப்பட்டோரில் சுமார் 60 பேர் தாய்லந்து சென்றுசேர்ந்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் அதிகமானோர் சீனர்கள்.
13 இந்தியர்கள், ஐந்து இந்தோனேசியர்கள், ஒரு மலேசியர் ஆகியோரைத் தாய்லந்துத் தற்காப்பு அமைச்சர் வரவேற்றார்.
மியன்மார் எல்லையோரம் உள்ள ஐந்து பகுதிகளில் மின்சாரம், இணையம், எரிபொருள் விநியோகம் போன்றவற்றைத் தாய்லந்து அண்மையில் தடைசெய்தது.
தாய்லந்திலிருந்து சீனாவைச் சேர்ந்த நடிகர் ஒருவர் கடந்த மாதம் கடத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மோசடிக்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிலையங்களை முறியடிப்பதற்கு அனைத்துலக நெருக்கடி அதிகரித்தது.
தாய்லந்தின் சுற்றுபயணத் துறையும் பாதிக்கப்பட்டது.
சீனா சென்றுள்ள தாய்லந்துப் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாட் (Paetongtarn Shinawatra) தமது நாட்டுக்கு வருவோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
மோசடி நிலையங்களுக்கு எதிராகத் தாய்லந்து எடுத்துள்ள நடவடிக்கைகளுக்குச் சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) நன்றி தெரிவித்துக்கொண்டார்.