மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர்-பிரியங்கா காந்தி..

மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாக காங்கிரஸ் எம்.பி.யும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

வயநாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி, “மக்கள் நல்லதொரு மாற்றத்தை விரும்புவது அனைத்து கூட்டங்களிலும் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

“நாம் கடினமாக உழைக்க வேண்டும், களத்தில் நிற்க வேண்டும், மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டும், அப்போதுதான் எதிர்கால வெற்றியை நாம் சொந்தம் கொண்டாட முடியும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், பல்வேறு தொகுதிகளிலும் வெற்றிமுகம் தென்பட்டதைத் தொடர்ந்து பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை கேரளத்திற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சி வட்டாரம் வெளியிட்டுள்ள அவரது பயணத் திட்டத்தின்படி, பிரியங்கா காந்தி வயநாடு மாவட்டத்தின் கட்சித் தலைமையுடன் சந்திப்புகளை நடத்த உள்ளார்.

மனந்தவாடி, சுல்தான் பத்தேரி, கல்பேட்டா சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள உயர் மட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் அவர், சனிக்கிழமை மாலை கல்பேட்டாவின் பள்ளிக்குன்னுவில் உள்ள லூர்து மாதா தேவாலயத்திற்குச் செல்வார்.

ஞாயிற்றுக்கிழமை எரநாடு, திருவம்பாடி சட்டபேரவைத் தொகுதிகளில் உள்ள உயர்மட்டத் தலைவர்களுடனும், திங்கட்கிழமை வண்டூர், நீலம்பூர் தொகுதிகளில் உள்ள தலைவர்களுடனும் சந்திப்புகளை நடத்துவார்.

அத்துடன், காட்டு விலங்குகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்பங்களையும் அவர சந்தித்துப் பேச உள்ளார்.

மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றபிறகு வயநாட்டிற்கு அவர் இரண்டாவது முறையாக அவர் வருகை அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.