வீடு கைமாறிய பிறகும் மறைவாக அங்கேயே வாழ்ந்துவந்த பெண்

திரைப்படத்தில் பார்த்த கதை போல் உண்மை வாழ்க்கையில் சீனாவைச் சேர்ந்த ஓர் ஆடவருக்கு நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சவுத் சைனா மார்னிங் போஸ்ட் முதன்முதலில் வெளியிட்டது.
கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் யென் கொடுத்து வீடு ஒன்றை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார் லீ என்ற அந்த ஆடவர்.
வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது படிக்கட்டின் பின்னால் ஒரு கதவு இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர்.
கதவுக்குப் பின்னால் பார்த்த காட்சியால் அதிர்ந்து போய்விட்டார்.
படிக்கட்டில் இறங்கிப் பார்த்தால் காற்றோட்டம், விளக்குகள், சிறு உணவுக்கூடம் ஆகிய வசதிகளுடன் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட ஓர் அறை!
அங்கு யாரோ வசித்து வந்துள்ளதற்கான அறிகுறிகளையும் லீ அடையாளம் கண்டுவிட்டார்.
அதற்குப் பின்னர் வீட்டைத் தம்மிடம் விற்ற முன்னாள் வீட்டு உரிமையாளரை மடக்கிப் பிடித்துக் கேள்வி கேட்டார் லீ. விற்பனையின்போது நிலத்தடி அறை குறித்து ஏன் எதுவும் கூறவில்லை என்ற கோபம் அவருக்கு.
ஆனால் அந்தப் பெண்ணோ பதிலுக்கு, “வீட்டை மட்டும்தான் உன்னிடம் விற்றேன். அதில் நிலத்தடி அறையும் சேர்க்கப்படுவதாக நான் கூறவே இல்லை,” என்றார்.
தமது சொந்த பொழுதுபோக்கு இடமாக அந்த அறையைத் தாம் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
நிலத்தடி அறையையும் லீக்குக் கொடுத்துவிட்டால் தாம் எங்கு உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பது என்று ஆடவரிடம் கேள்வியும் கேட்டுள்ளார் அந்தப் பெண்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த லீ, நிலச்சொத்துக்குத் தாம் பணம் கட்டியதால் நிலத்தடி அறையும் தமக்குத்தான் சொந்தம் என்று கோரியிருந்தார்.
அவருக்குச் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் லீக்கு இழப்பீட்டுத் தொகை தருமாறு அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளருக்கு உத்தரவும் இட்டது.