27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக மகத்தான வெற்றி

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது.
மொத்தமுள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 36ல் வென்றால் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கலாம். சிங்கப்பூர் நேரம் இரவு 10 நிலவரப்படி, பாஜக 47 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஓரிடத்தில் முன்னிலை வகித்தது.
கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆம் ஆத்மி 28 இடங்களில் வென்றுள்ளது. 2020 தேர்தலில் அந்தக் கட்சி 70ல் 62 தொகுதிகளைக் கைப்பற்றி அசுர பலத்துடன் வென்றது.
கெஜ்ரிவால் தோல்வி
அதிர்ச்சி அளிக்கும் முடிவு என்னவெனில், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராகக் களமிறங்கிய பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார். 2020 தேர்தலில் பாஜகவின் சுனில் யாதவ்வைக் காட்டிலும் ஏறத்தாழ 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற கெஜ்ரிவாலுக்கு இந்தத் தேர்தலில் படுதோல்வியே மிஞ்சியது.
தற்போது அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ள தோல்வியை வாக்குப் பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் தெளிவாக உணர்த்தி இருந்தன.
பாஜக இந்தத் தேர்தலில் வென்றதன் மூலம் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சி அமைக்கிறது.
முதல்வர் யார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் வர்மா முதல்வர் ஆக்கப்படலாம் என்ற ஊகம் பரவுகிறது.
அவரது தந்தை சாஹிப் சிங் வர்மா 1996 முதல் 1998 வரை டெல்லியில் பாஜக சார்பில் முதல்வராக இருந்தவர்.
தமது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.
ஆம் ஆத்மி உருவெடுப்பதற்கு முன்னர் வரை டெல்லியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி அங்கு அடியோடு மறைந்துவிட்டதைப் போன்ற நிலை நிலவுகிறது.
பாஜக வெற்றி உறுதியானதும் டெல்லி பாஜக தலைமையகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பாஜக அலுவலகங்களில் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடத் தொடங்கினர்.
நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் வாத்தியங்கள், தாளங்களுடன் நடனமாடி, கட்சிக் கொடிகளை அசைத்து, பண்டிகையைப் போன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் இம்மாதம் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், மொத்தம் உள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை (பிப்ரவரி 5) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.