கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து பாஜகவை பிரதிநிதித்து முன்னாள் டெல்லி முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மாவும் காங்கிரசைப் பிரதிநிதித்து முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் களமிறங்கினர்.

இதில் பாஜகவின் பர்வேஷ் வர்மா 30,088 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கெஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் கடைசிச் சுற்று முடிவில், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவினார்.

இங்கு மூன்றாமிடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித், 4,568 ஓட்டுகளை பெற்றார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போக வேண்டிய வாக்குகள் இவருக்குச் சென்றதால் கெஜ்ரிவால் தோல்வி அடைந்ததாக நம்பப்படுகிறது.

தன் தாயார் ஷீலா தீட்சித்தை, அதே தொகுதியில் நேருக்கு நேரான போட்டியில் தோற்கடித்த கெஜ்ரிவாலை, சந்தீப் தீட்சித் பழி வாங்கி விட்டதாக பரவலாகப் பேசப்படுகிறது.

ஜங்புரா தொகுதியில், ஆம் ஆத்மியை பிரதிநிதித்து அதன் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பாஜக சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டார். இங்கு கர்தார் சிங் தன்வார் 675 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மணீஷ் சிசோடியாவைத் தோற்கடித்தார்.

கடந்த 2013, 2015, 2020ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் புதுடெல்லி தொகுதியில் 3 முறை களமிறங்கி வெற்றி பெற்று கெஜ்ரிவால் முதல்வரானார். தற்பொழுது 4வது முறையாக புதுடெல்லியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்துள்ளார்.

தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்திருப்பது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய டெல்லி முதல்வர் அதிஷி ஆம் ஆத்மி சார்பாகப் போட்டியிட்டு 3,580 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ரமேஷ் பிதூரியை தோற்கடித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.